Sunday, 3 September 2023

ஒரு தேசம் ஒரே தேர்தல்


ஒரு தேசம், ஒரே தேர்தல்

கட்சிகளின் செலவைக் குறைக்க
அரசியலமைப்பின் அடிப்படையை அழிக்க வேண்டுமா? செலவைக் குறைப்பதற்காக ஒரே நேரத்தில் எல்லா பாராளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களையும் நடத்த வேண்டுமென்பது பலவீனமான வாதம். தற்போதைய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 2019இல் எழுதிய கட்டுரை.

எதிர்பார்த்தது போலவே மோடி 2.0 அரசு வேகவேகமாகத் தன் ஏமாற்றுக் குணத்தின் இரண்டு முகங்களையும் வெளிக்காட்டியிருக்கிறது. மோடி 1.0 போலவே இப்போதும் பிரதமர் ஆற்றிய பிரம்மாண்ட உரையைத் தொடர்ந்து பாஜக அல்லாத பிற கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரின் பதவியேற்பு இடையூறு செய்யப்பட்டது, முத்தலாக் மசோதா முன்வைக்கப்பட்டது, விசாரணையிலிருக்கும் தெலுங்கு தேசம் கட்சி ராஜ்ய சபா எம்பிக்கள் பாஜகவில் சேர்வது அறிவிக்கப்பட்டது. இவையெல்லாவற்றையும் விட அவர்களின் ஏமாற்று முகத்தை வெளிக்காட்டுவது 'ஒரு தேசம், ஒரே தேர்தல்' வேண்டும் என்ற பேச்சு.

பதவியேற்பில் மிக மோசமாக, வருந்திச் சிரிக்கும்படி

மதச்சார்பின்மையும் நடைமுறைகளும் மீறப்பட்டன. முத்தலாக் மசோதாவின் குற்றப் பிரிவுகள் அரசியலமைப்பில் உள்ள சமத்துவத்தை அப்பட்டமாக மீறுகின்றன. இவை போலவே, 'ஒரு தேசம், ஒரே தேர்தல் என்பது அரசியலமைப்பின் அடிப்படைக்கு எதிரானது - அரசியலமைப்பில் உள்ள 'மாநிலங்களின் ஒன்றியம்' என்ற கூட்டாட்சி அடிப்படை அமைப்பை வெளிப்படையாக மீறும் செயல். இடை ஏற்கனவே பலர் சுட்டிக்காட்டிவிட்டார்கள். இப்போது வெவ்வேறு கால அளவுகள் கொண்ட ஆட்சிகளுக்கு ஒரே ஐந்தாண்டு அளவை நிர்ணயிக்க முடியாது என்பதற்கான அமைப்புரீதியான, சட்ட வரம்புகளையும் சொல்லியிருக்கிறார்கள். (உதாரணத்திற்கு, முதல் 'ஒரே தேர்தலை' நடத்துவதற்காக அரசியலமைப்பின் எல்லைக்குட்பட்டு ஒரு மாநில அரசின் ஆட்சியை எப்படி நீட்டிப்பது அல்லது குறைப்பது?) ஒரு அரசு தேர்தலுக்கு முன்னே பெரும்பான்மை இழக்கும்போது என்ன செய்வது? (ஐந்தாண்டுகளில் மிச்சம் இருக்கும் காலத்துக்கு ஒரு அரசைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தி செலவை இரட்டிப்பாக்குவதா; பெரும்பான்மை இல்லாமல், எந்த மசோதாக்களையும் நிறைவேற்ற முடியாமல் இருக்கும் அரசையே மீத காலமும் ஆட்சி செய்யச் சொல்வதா?)

செலவைக் குறைப்பதென்ற வாதம் பலவீனமானது

இப்படியொரு விசயம் செய்தால் செலவு குறையுமா என்று பார்த்தால், சில உண்மைகளை ஆராய்ந்தாலே இல்லையென்று சொல்லிவிடலாம். மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நடத்தும் செலவுகள் ஒரு உறுப்பினருக்கு

1 கோடியிலிருந்து (சமீபத்திய கர்நாடகத் தேர்தல்கள் படி) ஐந்தாண்டுகளுக்கு எல்லா மாநிலங்களும் சேர்ந்து 4,150 கோடி முதல் மொத்தமாக 5,500 கோடிவரை ஆகிறது. அரசியலமைப்புப் படியான ஜனநாயகத்தில் வாக்காளரின் உரிமைகளை நிறைவேற்ற இது நிறைய பணம் என்று சொன்னாலும் கூட, ஐந்தாண்டுகளில் மாநிலங்களின் மொத்த பட்ஜெட்டோடு ஒப்பிட்டால் இது ஒன்றுமே இல்லை.

தமிழ்நாட்டையே உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.234 சட்டப்பேரவை உறுப்பினர்கள் எனும்போது, ஒவ்வொரு ஐந்தாண்டும் தேர்தல் நடத்த அதிகபட்சம் 250 கோடி செலவு எனலாம். ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்த முக்கியத் தேவையான இந்தச் செலவை:

தேர்ந்தெடுக்கப்படும் அரசின் ஐந்தாண்டு ஆட்சிக்கான மொத்த பட்ஜெட்டோடு ஒப்பிடலாம். இந்த 15அவது சட்டப்பேரவைக்கு அது குறைந்தது 13 லட்சம் கோடியாக இருக்குமென மதிப்பிடுகிறேன்.

அல்லது

சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் தொகுதி மேம்பாட்டு நிதியான 2.50 கோடி, மொத்தமாக 2,925 கோடி (பட்ஜெட்டில் 0.23 சதவீதம்) உடன் ஒப்பிடலாம்.

அதாவது ஒரு சட்டப்பேரவையை தேர்ந்தெடுக்க ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை செலவிடப்படும் பணம், அந்தத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் அரசியலமைப்புப் படி முடிவுசெய்யும் மாநில பட்ஜெட்டில் 0.02 சதவீதம்தான், அதே ஐந்தாண்டுகளில் அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியில் 8 சதவீதம்தான். நியாயமாகப் புரிந்து கொள்ளும் பலருக்கும் இந்தச் செலவுக் குறைப்பு விவாதம் இத்தோடு முடிந்துவிடும்.

இருந்தாலும், செலவுக் குறைப்பு குறைத்துப் பேசும்போது, மாநில, ஒன்றிய அரசுகள் எக்கச்சக்க பணத்தை கேள்விக்குரிய விசயங்களில் செலவு செய்வதையும் கவனிக்க வேண்டும் (சிலைகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள், விளம்பரத்துக்கு ஆயிரக்கணக்கான கோடிகள்). அதே நேரம், திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் திட்டமிடப்பட்ட நிதியில் நிறைய செலவுசெய்யப்படாமல் விடப்படுகிறது. (2016 சிஏஜி அறிக்கையில் கடந்த 20 ஆண்டுகளில் 1,30,000 கோடி செஸ் நிதி பயன்படுத்தப்படாமல் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.)

தேர்தல் நடைமுறையின் செலவுகளைப் பிரித்துப் பார்த்தபிறகும், ஒரே தேர்தல் நடத்துவதால் எந்தக் குறிப்பிடத்தக்க சேமிப்பும் நிகழும் என்று தெரியவில்லை. தேர்தல் ஆணையம் மிக மிகச் சில முழுநேர ஊழியர்களைக் கொண்ட ஒரு அமைப்பு, பெரும்பாலும் பதவிசார்ந்த அலுவலர்கள் (உதாரணத்திற்கு ஒரு மாவட்டத்தின் ஆட்சியர்தான் அதன் தேர்தல் அலுவலரும்), நியமிக்கப்பட்ட ஊழியர்கள் (உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, வாக்களிப்பு போன்றவற்றில் கூடுதல் வேலைகள் கொடுக்கப்படும்). ஒரே நாளில் இரண்டு மடங்கு மின்னணு வாக்கு இயந்திரங்களைப் பெற்று, கையாள்வதன் செலவை, இரண்டு வெவ்வேறு நாட்களில் பாதிப் பாதி இயந்திரங்களைக் கையாள்வதன்  செலவோடு ஒப்பிட்டால் அவ்வளவு குறைவாக இருக்காது. சொல்லப்போனால் தனித்தனியாகச் செய்வதே நம்பகத்தன்மையோடு, சிறப்பாக செயல்பட வழிவகுக்கும். களத் தேர்தல் நடைமுறைகளின் அடிப்படையான மற்றும் மாறும் செலவுகளை ஒப்பிட்டால், ஒரே தேர்தலால் செலவு குறைவதற்கான வாய்ப்பு தெரியவில்லை.

தேர்தல்களுக்கு இன்னும் அதிகம் செலவு செய்ய வேண்டும்

ஒரு தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தால் அரசு/பொது நிதிகள், வளங்களுக்கு எந்தப் பலனும் இல்லையென்றால், அரசியல் கட்சிகளின் செலவு? தேர்தல்களின் எண்ணிக்கையைக் குறைத்தால் அரசியல் கட்சிகளின் செலவு நிச்சயம் குறையும். ஆனால் அரசியல் கட்சிகளின் செலவைக் குறைக்க நமது அரசியலமைப்பின் அடிப்படையையே அழிக்க வேண்டுமா? நோயாளியைக் குணமாக்க மருத்துவரைக் கட்டிப்போடுவது போலிருக்கிறது இது.

தேர்தலில் போட்டியிட்ட அனுபவத்திலிருந்தும், கட்சியில் வேறுபல விசயங்களுக்கிடையே தரவுகளிலும் நடைமுறைகளிலும் கவனம் செலுத்திய அணியின் தலைவராகவும், நான் உண்மையான ஜனநாயக நடைமுறைகளை உறுதிப்படுத்த தேர்தல்களில் குறைவாக அல்ல, இன்னும் நிறைய செலவழிக்க வேண்டும் என்று சொல்வேன்.

வாக்காளர் பட்டியல்களில் சேர்ப்பு, விடுவிப்பில் பல ஓட்டைகள் தொடங்கி அடிப்படை நடைமுறைகளிலேயே பெரிய பிழைகள் இருக்கின்றன. வாக்காளர்களை வயதுவாரியாகப் பிரித்து ஒரு வரைபடத்தில் குறித்தாலே (இந்தியா போன்ற வளரும் நாட்டில் அது (இடது புறம்) இளையவர்களிடமிருந்து (வலது) வயதானவர்கள் பக்கம் சரிய வேண்டும்) 18- 25 வயதுள்ள இளம் வாக்காளர்கள் முழுமையாக சேர்க்கப்படாதது (விடுபட்டுள்ளது) தெரியும். போலி சேர்ப்புக்கு நமது 2017 ஆர்.கே நகர் இடைத்தேர்தலைப் பார்த்தாலே போதும், இந்த ஒரு சட்டப்பேரவை தொகுதியில் இருந்தே மாநில தேர்தல் ஆணையம், ஏப்ரல் 2017இல் இடைத்தேர்தல் திட்டமிடப்பட்டு ரத்து செய்யப்பட்டது தொடங்கி டிசம்பர் 2017க்குள், 47,000 பதிவுகளை நீக்கியிருக்கிறது.

இந்த நீக்கங்களுக்குப் பின் வாக்காளர் பட்டியல்களை ஆராய்ந்து பார்த்தபோது இன்னும் பல நூறு போலி/தெளிபதிவுகளைக் கண்டோம் -அவற்றைச் சரிசெய்ய தலைமை தேர்தல் ஆணையரிடம் எடுத்துச் சென்றோம். அவற்றில் அதிர்ச்சிகரமான ஒன்று, ஒரு வாக்காளர் அடையாள அட்டை ஐந்து வெவ்வேறு சாவடிகளில் ஆறு முறை பட்டியலிடப்பட்டு இருந்தது, ஐந்தில் 26 வயதுள்ள இந்துப் பெண் பெயர் ஒன்றிலும், ஒரு சாவடியில் மட்டும் அதே வாக்காளர் 43 வயதுள்ள முஸ்லீம் ஆணாகவும் பட்டியலிடப்பட்டு இருந்தார்.

தேர்தல் நாளில் வாக்குச் சாவடிகளில் அனுபவமுள்ள எவரும் இன்னும் பல பிரச்சினைகளைச் சுட்டிக்காட்ட முடியும். தேர்தல் பணிக்கு வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்படும் அரசு ஊழியர்கள், வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த போட்டியாளர்களின் வாக்குச் சாவடி பிரதிநிதிகள் பெரும்பாலானோர் தேர்தல் நடைமுறைகளில் முழுமையான பயிற்சி பெறுவதில்லை. விசமத்தனமான செயல்களை விடுங்கள், எதிர்பாரா

செயல்பாடுகளை (பாதி நாளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதாவது) கையாளக்கூட முழுமையாக பயிற்சி பெறுவதில்லை. பெரும்பாலும் வாக்குச்சாவடி அதிகாரிகளும் போட்டியாளர்களின் பிரதிநிதிகளும் 17சி படிவங்களை (வாக்களிப்பு முடிந்தபின் மொத்தம் பதிவான வாக்குகள் எண்ணிக்கை அறிவிப்பு) காலையிலேயே விவரங்கள் நிரப்பாமலேயே கையெழுத்து போட்டுவிடுகிறார்கள் என்பதை அறிந்தோம்.

தேர்தலின் வெவ்வேறு நிலைகளில் தேர்தல் ஆணையம் அதன் படிவங்களில் பட்டியல்களில் அறிவிக்கும் தரவுகள் நிறைய தொடர்பற்றிருக்கின்றன. சமீபத்திய பொதுத் தேர்தலில் நூற்றுக்கணக்கான இடங்களில் 17சி காகிதப் படிவங்களில் உள்ள மொத்த வாக்கு எண்ணிக்கைக்கும் ஆணையத்தின் திரட்டறிக்கைக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்ததைக் கண்டோம். பெரும்பாலான இடங்களில் இது சில வாக்குகள் கூடுதல் குறைவுதான். ஆனால் சில இடங்களில் இது நூற்றுக்கணக்கான வாக்குகள். நல்லவேளை எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்கு எண்ணிக்கைக்கு முன் பல பெரிய வேறுபாடுகளைச் சரிசெய்தார் - பெரும்பாலானவை அலுவலர் நிலை/தட்டச்சுப் பிழைகள் என திரும்பப் பெறப்பட்டன.

இருப்பதிலேயே மோசம், ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும், கிட்டத்தட்ட ஒவ்வொரு தொகுதியிலும், ஆணையத்தின் சாவடி வாரி வாக்கு எண்ணிக்கைக் கணக்குக்கும் (17சி படிவங்கள்), சாவடி வாரியாக வாக்கு எண்ணிக்கை நாளில் எண்ணப்படும் வாக்குகளுக்கும் (20 படிவங்கள்) உள்ள பெரிய வித்தியாசங்கள். இங்கும் இரண்டு வகை தவறுகளும் நடக்கின்றன: சில இடங்களில் போடப்பட்டதை விட நிறைய வாக்குகள் எண்ணப்படுவது, சில இடங்களில் எண்ணப்பட்டதை விட நிறைய வாக்குகள் போடப்பட்டுள்ளது.

நான் இந்தத் தவறுகளில் (இதுவரை) எந்தச் சதித்திட்டமும் இருப்பதாக குற்றஞ்சாட்டவில்லை, இவை எல்லாவற்றையும் தேர்தல் ஆணையம் அற்புதமாக “தற்காலிக" முத்திரை ஒன்றைக் குத்தி விளக்கிவிடுகிறது. ஆனால் இத்தகைய முரண்பாடுகள் வாக்குச் சாவடி போன்ற அடிப்படை, சிறிய நிலைகளில் எண் ணிக்கைகளில் திரும்பத் திரும்ப நிகழும்போது, ஒரு நடைமுறையின் பல்வேறு நிலைகளில் நிகழும்போது, அந்த நடைமுறையை நிறைய முன்னேற்ற வேண்டியிருக்கிறது என்று தெரிகிறது. இன்னும் நிறைய ஆட்களையும் பிற வளங்களையும் முதலீடு செய்யாமல், இத்தகைய முன்னேற்றத்தை நம்மால் அடைய முடியாது.

நாம் தேர்தல்களுக்கு குறைவாக இல்ல, இன்னும் நிறைய செலவு செய்ய வேண்டும். அப்போதுதான் ஜனநாயகத்தின் இந்த மிக மகத்தான புனிதமான செயல்பாடு அதிகபட்ச நேர்மையோடு, நம்பகத்தன்மையோடு, வெளிப்படையாக நடப்பதை உறுதிசெய்ய முடியும்.

(Author note Dr. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர். இக்கட்டுரை எழுதப்பட்ட போது தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக் கணக்குகள் குழுவின் உறுப்பினராகவும், திமுக ஐடி அணியின் தலைவராகவும் இருந்தவர்)

No comments:

Post a Comment

புன்னகை

சர்க்கரை அளவு  குறைந்தால் சாக்லேட் தேடும் சர்க்கரை நோயாளி போல ரத்த அழுத்தம்  குறைந்தால் காபி குடிக்கும் குறை ரத்த அழுத்த நோயாளி ...