Showing posts with label Relationship. Show all posts
Showing posts with label Relationship. Show all posts

Thursday, 25 November 2021

சலிப்பு

காதலும் சலிக்கும் 
       காலம் மாறினால்
காதலியும் சலிப்பாள் 
       கல்யாணம் ஆனால்
நட்பும் சலிக்கும்
      நகைப்பு குறைந்தால்
உணவும் சலிக்கும்
       சமைப்பவர் மாறினால்
உடையும் சலிக்கும்
       ரசிப்பவர் மாறினால் 

உரையாடல் சலிக்கும்
      ஒருவரே பேசினால்
பணமும் சலிக்கும்
     கேட்பார் குறைந்தால்
புகழும் சலிக்கும்
     புகழ்வோர் மிகுந்தால்
கருணை சலிக்கும்
     கைகள் அதிகமானால்
விளையாட்டு சலிக்கும்
     விருதுகள் குறைந்தால் 

குளிரும் சலிக்கும்
     மார்கழி நீண்டால்
வெயிலும் சலிக்கும்
    வெப்பம் மிகுந்தால்
மழையும் சலிக்கும்
    விடாமல் பெய்தால்
துணையும் சலிக்கும்
       நிம்மதி குறைந்தால்
வேலையும் சலிக்கும்
      தூக்கம் மிகுந்தால் 

சலிக்காத ஒன்றை
     சல்லடையில் தேடினேன்
கிடைக்கவே இல்லை
     மறுபடியும் சலிப்பு
எல்லாம் சலிக்கும் 
      இயற்கையின் விதி !!!


Sunday, 21 November 2021

அளவும் காலமும்

பசிக்கும்போது 
       கொடுக்காத பாலும்
பசிக்காதபோது 
       கொடுக்கும் பாலும் வீணே!! 

தேவையான நேரத்தில் 
       கிடைக்காத பாராட்டும்
தேவையில்லா நேரத்தில் 
       கிடைக்கும் பாராட்டும் வீணே 

நேரத்தில் கிடைக்காத நீதி
     நேரமாகி கிடைத்த நீதி 
வாதியைப் பொருத்தவரை
      இரண்டும் வீணே! 

மனம் விரும்பாத நேரத்தில்
     ஒலிக்கும் இசையும்
மனம் விரும்பும் நேரத்தில்
     கேட்கும் சத்தமும் வீணே

ஐந்து வருடம் உழைத்தவனுக்கு
     ஆயுளுக்கும் ஊதியமும்
ஐம்பது வருடம் உழுதவனுக்கு
     ஐந்து ரூபாய் எலிமருந்தும் வீணே

உடலே அசைக்காதவனுக்கு
      உணவுவகை ஐந்தாறும்
ஓடி ஓடி உழைத்தவனுக்கு
      ஒரு பிடி சோறும் மோரும் வீணே

அளவும் காலமும்
      மிகமிக அவசியம்
அளவு மிஞ்சினால்
      வேலையில்லை என்பர்
காலம் கடந்தால்
      தேவையில்லை என்பர்

Wednesday, 17 November 2021

பாஞ்சாலி

இல்லை என்று சொல்லாத
     தரும சிந்தனை(தருமன்)
கொண்ட நோக்கத்தில்
    தெளிவான அறிவு(அர்ச்சுனன்)
எதிரில் நிற்போரை
   வெல்லும் உடல்வலிமை(பீமன்)
வயிர்வழி உயிர் தொட
   சமையலில் புலமை(நகுலன்)
எதிர்காலத்தை கணிக்கும்
   துல்லிய திறமை(சகாதேவன்) 

ஐந்து குணத்தையும் மணப்போர்
    வாழ்வில் சிறப்பர்
பெண்ணை துயில் உரிக்க
    காத்திருக்கும் சபையில்
கிருஷ்ணர் வந்தாலும்
    வராவிட்டாலும்
கௌரவர் மத்தியில்
    எப்போதும் ஜெயிப்பர்

ஆனந்த கிறுக்கல்



சேர்ந்துசிரித்த ஞாபகமோ
சண்டையிட்ட ஞாபகமோ
விடுதியில் தவித்தபோது
சோறு தந்த ஞாபகமோ
கரூரில் இருவரும்
படம் பார்த்த ஞாபகமோ
கிரிக்கெட்டும் கிட்டிபுல்லியும்
விளையாண்ட ஞாபகமோ
சைக்கிளில் டபுள்சில்
காமாட்சிபுரம் சென்ற ஞாபகமோ

என்னதான் நினைப்போ
இப்படி கிறுக்கி வைக்க
அத்தை மகன் ஞாபகமாய்
ஆனந்தின் கிறுக்கல்கள்

Tuesday, 16 November 2021

அப்பா

ஊருக்குள்ள பிரச்சினையோ

உறவுக்குள்ள மனவருத்தமோ

ஓடி வந்து தீர்த்து வைப்பார் 


ஊரெல்லாம் சுற்றி வந்த

சைக்கிளும் டீவிஎஸ் ம்

உம் அருமை மறந்திடுமா

வாழ்வெல்லாம் பயணித்த

உம்முடனே மறைந்திடுமா 


சாந்தி வந்து சேருமோ

மீந்திருப்போர் வாழ்விலே 


நிதானமும் நிம்மதியும்

சொத்து போல 

சேர்த்து வைத்தார்

சொந்தங்களை கூட

சொத்தாகவே பார்த்தார்

அமரவைத்து புத்திமதி

இன்முகத்துடன் சொன்னார்!

ஒத்தை லட்சம் கேட்டால்

இரண்டாய் தந்துவிட்டு

இன்னும் வேண்டுமா,

உம்மையன்றி யார் கேட்பார்?

பரிசும் பணமுடிப்பும்

பண்டிகையில் யார் தருவார்?

எப்ப வர்ரே எப்ப வர்ரே

நூறுமுறை யார் கேட்பார்? 


காண முடியாமலும் 

பேண முடியாமலும்

கண்ணில் நீர் தந்து

விண்ணைத் தொட சென்றவரே

விம்முவது கேட்பீரோ



இப்படிக்கு 


ஈற்றும்

பேற்றும்


மரணத்தை வென்றார் உண்டோ


இருநூறு வருடங்கள்
     வாழ்ந்தவர் உண்டோ
உடைந்து நிற்கும்
     அரண்மணைகள் சாட்சி
உலகையே ஆண்ட
      அலெக்சாண்டர் சாட்சி
உத்திரமேரூர் 
      கல்வெட்டு சாட்சி
உள்ளூரில் வாழ்ந்து கெட்ட
      ஜெயா அம்மா சாட்சி
வந்தவரெல்லாம் தங்கினால்
        வருவோருக்கு இடமேது
போவோரெல்லாம்
        மீண்டும் வருவர்
உருமாறி உறவுமாறி
        மகனாய் மகளாய்
பேரனாய் பேத்தியாய்!!
      
  
இருப்பு இறப்பு
       இரண்டும் நிலையில்லை
சாவும் சோகம்
        சாகா வரமும் சோகம் 
இயற்கையிடம் தோற்றுவிடு
        இயன்றவரை வாழ்ந்துவிடு 
மனதை மடைமாற்று
        மயக்கம் தெளிந்துவிடும்

Monday, 15 November 2021

அப்பா


மூவர் உயிர் வளர்த்து
மூவாயிரம் மூளை வளர்த்து
மகனாய் மாண்பு வளர்த்து
தகப்பனாய் ஆயுள் நிறைத்து
முதுமையில் தவித்து நின்றார்!

ஊருக்குள்ள பிரச்சினையோ
உறவுக்குள்ள மனவருத்தமோ
ஓடி வந்து தீர்த்து வைப்பார்
காண முடியுமோ இனி
உம்மைப்போல் ஒருவர்?
பேசி முடியுமோ உம் பெருமை?


ஊரெல்லாம் சுற்றி வந்த
சைக்கிளும் டீவிஎஸ் ம்
உம் அருமை மறந்திடுமா
வாழ்வெல்லாம் பயணித்த
உம்முடனே மறைந்திடுமா

ஆசையாய் வளர்த்த மகன்
செட்டிநாட்டில் கொடிகட்ட
கடைசியாய் வந்த மகன்
கால்மேட்டில் காத்து நின்றார்

பூரணமும் கரையுமே
பரிமளமும் வாடுமே
சாந்தி வந்து சேருமோ
மீந்திருப்போர் வாழ்விலே

நிதானமும் நிம்மதியும்
சொத்து போல
சேர்த்து வைத்தார்
சொந்தங்களை கூட
சொத்தாகவே பார்த்தார்
சம்பிரதாய சந்தேகங்களும்
உறவு முறையின் குழப்பமும்
யாரிடம் கேட்பேனோ?
கருத்தில் நீங்குமோ
கற்று தந்த அத்தனையும்!
அமரவைத்து புத்திமதி
இன்முகத்துடன் சொன்னார்!
ஒத்தை லட்சம் கேட்டால்
பத்தாய் தந்துவிட்டு
இன்னும் வேண்டுமா,
உம்மையன்றி யார் கேட்பார்?
பரிசும் பணமுடிப்பும்
பண்டிகையில் யார் தருவார்?
போனில் பேசும் முதல் சொல்லில்
சளியா ம்மா யார் அறிவார்?
எப்ப வர்ரே எப்ப வர்ரே
நூறுமுறை யார் கேட்பார்?

காண முடியாமலும்
பேண முடியாமலும்
கண்ணில் நீர் தந்து
விண்ணைத் தொட சென்றீரே
விம்முவது கேட்பீர்


இப்படிக்கு

ஈற்றும்
பேற்றும்

Monday, 8 November 2021

கேள்வி இரண்டு வகை ?....?



சௌக்கியமா?
நலமா தெரிந்துகொள்ள
நலமோ தெரிந்துகொள்ள
முதல் வகை அக்கறை
இரண்டாம் வகை பொறாமை 

சாப்பிட்டயா?
முதல் வகை அக்கறை
இரண்டாம் வகை தீர்ந்துபோச்சா? 

படிச்சியா?
முதல் வகை அக்கறை
இரண்டாம் வகை அதிக மார்க் எடுத்துடுவாளோ? 

காசு இருக்கா?
அக்கறையும் உண்டு
வச்சுருக்கானோ வும் உண்டு

போனில்  "எங்கிருக்க"
முதல் வகை அக்கறை
இரண்டாம் வகை சுற்றலோ? 

வாட்ஷ் அப் ல என்ன பண்ற?
முதல் வகை ப்ரண்ட்ஸ் உடனா?
இரண்டாம் வகை வேறு யாராவது?



Thursday, 4 November 2021

அப்பா எங்கே தோற்கிறார்?

நண்பன் மகள் டாக்டர் ஆனாள்
நீயும் டாக்டர் ஆகணும் என்றார்

மகள் சொன்னாள் டிசைனர் ஆவேன்
அப்பா சொன்னார் ப்ராடக்ட் டிசைன்
மகள் சொன்னாள் யூசர் இன்டர்பேஷ்

நண்பன் மகளுக்கு டாவோ வில் வேலை
நீயும் அங்கே வாங்கனும் என்றார்

அம்மா சொன்னார் 
இருவர் துறையும் வேறுவேறு
இவள் துறையில் சிறக்கட்டும்!

நண்பன் மகன் ஐர்லேண்ட் சென்றான்
நீயும் போ இங்கிலாந்து என்றார்
மகள் சொன்னாள் ஜெர்மன் செல்வேன்

கடைசியில் அப்பா சொன்னார்
நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை

என் பேச்சுக்கு மரியாதையில்லை
மகள் சொன்னாள் என் விருப்பம் யாருக்கும் புரியவில்லை

அவர் சொல்வதை கேளேண்டீ!

புருசனுக்கு சப்போட்டா 
முகத்துக்கு நேராய் கேட்டாள்

விடுங்க அவளுக்கு பிடித்ததை படிக்கட்டும் என்றேன்
எப்பவும் மகளுக்கு சப்போர்ட் என்றார் 

இருவருக்கும் இடையில்
மத்தளமாய் அம்மா

இதில் யார் சரி? யார் தவறு?
அப்பாவின் அணுகுமுறையா?
மகளின் பிடிவாதமா?

Monday, 1 November 2021

காயம்


காயங்களிலிருந்து

தேன் வடியுமோ?

இன்பேச்சு வருமோ?

பொதிமாடு

சிரிக்குமோ?

காவடிக்காரன்

நாட்டியம் நயமோ?

சுமைகளை குறை

சிறகு விரிப்பேன்

சிரிக்க சிங்காரிக்க

படிக்க பாட

நடனமிட சுற்ற

ஆயிரம் உண்டு

ஆசை எனக்கும்!

பி.......ரிவு

நிஜத்தில் நெருங்கவும் இல்லை

நினைவில் நீங்கவும் இல்லை

எழுத்தும் வலையும்

இணைத்தது சில  காலம்

பிரிவு மீண்டும்.......

நினைவுகள் தொடரும்

நிழல்களாய்

அழுவதா சிரிப்பதா

சுகம் ஒன்று வந்தால் 

மற்றது போகிறது

சமநிலையில் மனம் 

வாழ்த்து வராது

நகைப்பு வராது

அரசியல் வராது

நடப்பு தெரியாது

வலிகள் தெரியாது

வானம் பார்த்த பூமியாய்

வாழ்க்கை கழியும்

.

.

.

.

பெரும் மூச்சுடன்

வாழ்கவளர்க!

இடஓதுக்கீடு

J படும் பாடு

 

J வும் S உம் நெருங்கிய பந்தம்

46 வருசம் உறவுக்காரர்கள்

J உயிர் தந்தது S க்கு  

உடல் வளர்த்தது

பொருள் தந்தது அருள் தந்தது

இனியதொரு பொன்னாளில்

இல்லாளாய் M வந்தது

வை நீக்கி M சேர்த்து

SM பேனர் நீண்டது  14 வருடம்

சிக்கன்குனியா வந்து

M மறைந்தது 

S உடனே J வுடன் இணைந்தது

இரண்டு வருடம் கூட்டணி

எங்கு பார்த்தாலும் JS விளம்பரம்

இன்னொரு பொன்னாள்

திடீர் என K நுழைந்தது

மீண்டும்கழட்டிவிடப்பட்டது 

இப்போது ஊரெல்லாம் SK பேனர்

நிரந்தர இடஒதுக்கீடு 

கோரி J போராட்டம்



 

 

Saturday, 30 October 2021

EMPTY

EMPTY



நீ வந்து போனபின்

வீடு முழுக்க பரவியிருக்கும் வெறுமையை விவரிக்க

வார்த்தைகள் தேடுகிறேன்

நீ அமரும் இடம் காலியாக!

மகளின் மீதான புலம்பல்கள்

மகனின் மீதான பீத்தல்கள்

கேட்க காது காத்திருக்க,

பேசும் வாயை காணோம்!

ஓசையின்றி மூவரும்

அவரவர் உலகில்

ஆளுக்கொரு மூலையில்!

மறுபடியும் மூன்று டம்ளர்

மூன்று தட்டு மூன்று மூலை!

விடியல் வேறு வேலை வேறு

உறங்கும்  பொழுது வேறு

உணவு வேறு உணர்வு வேறு

உறவாடும் உதடு  வேறு

புன்னகைக்க காரணம் வேறு

டேக்ஸி தெருமுனையை

தாண்டியும் தாண்டாமல்

ஹெட்செட் கேட்டு பிடிவாதம்!

வீட்டில் நுழைந்த நொடியில்

மகனின் கையில் டீவியும் போனும்!

நீண்ட பெருமூச்சு எனக்குள்!

எப்போது முடியுமோ உன் பயணம்?

எப்போது  தொடங்குமோ

நம் வாழ்க்கை ??

சுகந்தி

சுகவாசி சுகபோகி சுதந்திர தேவி!  எனது வலியை அறிந்தவள் வறுமையை பகிர்ந்தவள் செழிப்பில் மகிழ்ந்தவள் அகம் புறம் அனைத்தும் அறிந்தவள் உர...