Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts

Wednesday, 7 August 2024

மழை

காய்ந்து கிடந்த என் 
மன நிலத்தில் மழையாய் 
பொழிந்து ஈரமேற்றிய வெண்மேகமே...

இருள்கவ்விய என் 
இரவுக்குள் இன்ப வலியாய் நுழைந்து ஒளியேற்றிய பெண்ணிலவே...

சீரின்றி சிதறித்திரிந்த 
என் சிந்தைக்குள் 
அரவம் இன்றி சரணம் 
இயற்றிய இருங்காட்டுக்குயிலே...

மாலை நேர மித வெயிலில்
குளிர் காயும் கூவிரமலரே ...

மறைந்திருந்து உனை பார்க்கும் 
என் மனமதனை அறிவாயா... ❣️

என்னருகே நீ இருந்தால்...

நெடுந்தூர நடையும் 
சுடும் வெயிலும் கூட
சுகமாகுது..
என்னருகே நீ இருந்தால்... 🌹

மனதை வதைக்கும் 
சோகங்களும் மதியை 
மறைக்கும் சிந்தைகளும்
சீராகுது..
என்னருகே நீ இருந்தால்... 🌹

என்னத்தின் சிதறல்களும் 
ஏக்கங்களின் பிளிரல்களும்
இதம் காணுது..
என்னருகே நீ இருந்தால்... 🌹

விடியாதிருந்த இரவுகளும் 
விடை தேடிய இருள்களும்
வெளிச்சம் பெருகுது..
என்னருகே நீ இருந்தால்... 🌹

நீ இல்லா நேரமும் கூட 
உன் நினைவுகளால் 
இனிமையாகுது..
நெஞ்சமும் உனை
நினைத்து இசைத்து பாடுது... 🌹

Tuesday, 6 August 2024

சந்தக் கவிதை

நான் 
சலிக்காமல் 
வாசிக்கும் 
சந்தக் 
கவிதையடி.. நீ 

விழிக்குள் 
ஓவியமாய் 
விந்தைக் 
கவிதை யடி!!

மொழிக்குள் 
மோனையாய் 
செழிக்கும் 
கவிதையடி.. அழகே நீ...

Saturday, 20 July 2024

செல்வத்துள் செல்வம்

செல்வத்துள் எல்லாம்
சிறந்த செல்வம் நீ 

வாரி அணைக்கையில்
கள்ளூரும் இன்பம் நீ 

பொக்கை வாய் காட்டி
புன்சிரிப்பு சிரிக்கையில்
சிலையும் உன்னோடு
சேர்ந்து சிரிக்குமே 

இரவு தூக்கம் 
திருடிய இனிய கள்வனே 

ஓய்வு நேரம் குறைத்து
உன் பின்னே ஓட வைத்து
விளையாட்டு காட்டி
வேலை வாங்கிய 
முதலாளி சிறுவன் நீ 

ஒரு வருடத்தில்
ஓராயிரம் இன்பம்
எண்ணவோ
சொல்லவோ
என்னால் ஆகாது
ஆனாலும் 
அத்தனையும் சுகம்

பொறுப்பற்ற பறவையாய்
பறந்து திரிந்த
தாயை தந்தையை
பொறுப்புள்ள பெற்றோராக
மாற்றிய ஆசிரியன் நீ! 

வாடாத மலரே
வாசமிகு மல்லிகையே
வாழ்வாங்கு வாழ்க நீ 

கருவில் சுமந்தவள்
கனவில் சுமந்தவர்
இருவரும் கர்வப்பட 

உற்றாரும் உறவினரும்
உன்னால் பெருமையுற 

கற்றோரும் சான்றோரும்
உனக்கு புகழ்மாலை சூட்ட 

பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூறாண்டு
வாழ்க வாழ்கவே!

Wednesday, 26 June 2024

புளியோதரை

அறிமுகமில்லாத நகரத்தில்
அருகிலுள்ள கோவிலில்
அம்மனை தரிசித்து
புளியோதரையோடு 
படியில் அமர்கையில்
அம்மாவின் நினைவுகள்
அலைகளாய் வரும்

புளியோதரை வாங்காமல்
உங்கம்மா வரமாட்டாள் பாரேன்
என கிண்டலடிக்கும்
அப்பாவோடு சேர்ந்து சிரித்த
ஞாபகங்கள்
பிரசாதம் கிடைக்கலைனா 
ஆசீர்வாதம் கிடைக்காதமாதிரி என
பிடிவாதமாக வாங்கிவந்து
வேண்டாம்னு சொல்லாதே
ஒரு வாயாச்சும் சாப்பிடு
என திணித்த நாட்களின் 
நினைவுகள் வர

பனித்த கண்களோடு
திண்ணும்போது
புளியோதரை லேசாய் 
உப்புக் கரித்தது.

Saturday, 11 May 2024

சாரி

சாரி சொன்னேன்
பதிலில்லை

புரிந்துகொண்டேன்
கோபம் என! 

சுகந்தம்

அழைப்பும்
பார்வையும்
மின்சாரம்!
எனக்காக
வந்ததுபோல்
உள்ளுணர்வு

உண்மையா என
உன்னிடம் 
நெருங்கும்போது
கேட்கிறேன்.
ஆம் என்று 
சொல்லிவிடு
அதற்காக ஆசைப்படுகிறேன்

தயாராகி வந்தேன்
உன்னில் கலந்துவிட
தயக்கம் வந்து
தலைதூக்க
தள்ளி அமர்ந்து
திரும்பிவந்தேன்

எண்ணங்களை 
திருடி ஆராயவேண்டும்
என்ன நினைத்தாய் என

ஏற்பாயா
தவிர்ப்பாயா

எப்போது வருவாய்
எதிர்பார்ப்போடு
காத்திருக்கிறேன் 



Saturday, 30 March 2024

துணை

துணை எது ?
வெற்றி விலகினாலும்,
உறவு உதறினாலும்,
துன்பம் துரத்தினாலும்,
வறுமை வாட்டினாலும்,
உற்ற நிழலாய் வருவது, துணிவே !
துணிவே "துணை"  ஆனால்,
துயர் ஏது ?

துவழும்போதெல்லாம்
ஊக்கம்கொடுப்பாள்,
தடுமாறும்போது,
ஊன்றுகோலாவாள்,
இடரும்போது,
தாங்கிப்பிடிப்பாள்,
துணை அவள் துணிவே !
வாழ்க்கை அலையில்,
வெற்றிக்கரை அழைத்துசெல்வாயா ?
வெற்றித்திருமகள் துணையே !

Wednesday, 28 February 2024

ஊடல்

பேரன்பு மழைக்கு ஏங்கும் மலரவள்
பெருவெற்றி பெருவெள்ளத்திற்கு தகிக்கும் தடாகம் நான்
சூழியல் இடர்க்கீடே கரையும் காலம்,
சில குரல் ஒலிகளும்
ஊடூடே கேளிக்கை  சித்திரஓவிங்களாய்
சில நேரம் மட்டும் அன்பு பரிவர்த்தனைகள் நடந்தேற
ஊடல்கள் சபையேறும் நேரம் இது
துயிலடையா கனவுகள் கரைசேர்க்கும் வரை

காதலிக்க நேரமில்லை

அறிவதுமில்லை,
தெரிவதுமில்லை,
புரிவதுமில்லை !
சில பயண துயரங்கள் !
முகப்பு முல்லைகளின்,
வாசங்கள் தெரிவதில்லை,
முற்றத்து கீத ஒலிகேட்பதில்லை,
சாளரத்து தென்றல் உணர்வதில்லை !
விடிவதும், பொழுது சாய்வதும்,
விழிப்பதும், துயில்வதுமாக,
வாழ்க்கை பயணங்கள் !
கண்மூடினால் இலக்குகள்,
கண்விழித்தால் கடமைகள்,
இடையே பயணங்கள்,
இதில் எனக்கும்,
எனக்கானவருக்கும் ,
நேரம் கிடைக்குமா ?

உறவை போல்,
நானும் ஏங்கி நிற்கிறேன்❤️❤️ !

Wednesday, 10 January 2024

ஹைக்கு - 2

        (1)

சிதறக் 
காத்திருக்கும்
உடைந்தக்
கண்ணாடி 
துண்டுகளா
நாம்?

         (2)

படித்தால்
சுதந்திரம்
கிடைக்கும்
என நம்பாதே!

நீ அடிமை தான்

அப்பாவுக்கு
அண்ணனுக்கு
கணவனுக்கு
குழந்தைகளுக்கு

விலங்குகள்
திறக்கப்படுவதில்லை

சொந்தம்
பந்தம்
கைகளில்
உன் விலங்கின் 
சாவி!.

Monday, 8 January 2024

கோபம்

கோபங்கள் ஏனோ ?
உரிமையினாலா ?
ஊடலினாலா ?
எண்ணங்கள் சொல்லி,
விடைகளை தேடி,
ஊடலை களைவாயா ?
உரிமைகள் தொடர்வாயா ?

பருவம் தப்பிய பயிர்,
கனலில் கருகலாமா ?
கருணைமழை பொழியலாமே !❤️❤️

Sunday, 31 December 2023

புத்தாண்டு பரிசு 2024

புத்தாண்டு புதுப்பரிசு,
மலரா ? மரகதமா ?
மனையா ? மாளிகையா ?
இது எதுவும்,
மங்கை நீ யாகுமோ ?
நீயே பரிசானபோது,
விண் தாண்டி நிற்கிறேன் !
மூவுலகும் வெல்கிறேன் !

Friday, 22 December 2023

இணைந்த கைகள்

(1)
தலைகோதி,
தோள்கொடுத்து,
துயர்க்கேட்கும் காதுகள்,
இறுக்கப்பற்றும் கரங்கள்,
ஆசுவாசப்படுத்தும் பேச்சுக்கள்,
மீளாத்துயரில் இருந்தும் மீட்கும்,
இமாலய வெற்றிகள் ஈட்டும்.
❤️❤️

(2)
பட்டமரம் துளிர்க்கும்,
பாலைவனம் நீர் சுரக்கும்,
வெண்மேகம் பொழியும்,
நம்பிக்கை மட்டுமிருந்தால் !
❤️❤️

Wednesday, 20 December 2023

ஹைக்கூ...

(1)

மிஸ் யூ சொல்லாமல் 
புரியவைத்தான்
மிஸ்டு கால்ஸ் மூலம்!

(2)

மோதியும் அவனும் 
ஒரே இனம்
அவனுக்கு பிடிக்காத
எனக்குள் உறங்கும் 
மற்ற நினைவுகளை
அப்பட்டமாக வெளியேற்றுவான்
எதிர்க்கட்சி எம்பிக்களைப்போல!

(3)

பேசிப்பேசி 
கொள்ளையடிப்பர்
ஒருவர் நாட்டை
மற்றவர் மனதை!

(4)

மாமா னு சொல்லலை
என்பதில் துவங்கும்
அவனது ஏக்கங்கள்!

(5)

காத்திருக்க வைப்பதில்
அவனும் நானும் ஒரே இனம்!


Saturday, 16 December 2023

தூரம்

வெந்நீர்
சூப்பு
ரசம்
கிச்சடி
மருந்து
எதுவும்
தரமுடியாது

அருகில்
அமர்ந்து
தலைகோத
முடியாது

மூலையில்
படுக்கையில்
ஒற்றையில்
எங்கோ நீ
கிடக்கையில்

உறவென
நானிருந்து
என்ன பயன்?

காற்றென
ஒலியென
ஒளியென
பாய்ந்துவர
வழியின்றி

வெற்று
வார்த்தைகளால்
வருடுவதால்
உன் வலி குறையுமோ?

இல்லை
என் வலிதான்
குறையுமோ?

சுமைதாங்கி

அவன் சுமைகளை
இறக்கிவைக்கும்
சுமைதாங்கி நான்
தனது கனவுகளை
என் செவி வழி நுழைத்து
சிந்தையை நிரப்பி
முழுநேரம் எனை
ஆட்கொள்வான்
அப்படி செய்யலாமா
இப்படிசெய்யலாமா
அதை செய்யலாமா
இதை செய்யலாமா
இப்படியே குழம்பியிருப்பேன் நான்

இடையிடையே
முத்தமிட்டு சிரித்து
கொஞ்சி கெஞ்சி
சரிபண்ணி விடுவான்

Friday, 15 December 2023

நினைவுகள்

கடமையில் மூழ்கி 
வெற்றி முத்தெடுக்கவா ?
பணிகளின் ஊடே,
புதையல் தேடவா ?
காலத்தையிட்டு,
கனவுகளை உயிர்ப்பிக்க,
உழைப்பு மூலதனமே,
கைவசம் இருக்க !
நினைவுகளோடு ஓர் பயணம்,
நினைவு மட்டும் ஊடூடே வந்துபோக !
விரைந்து வெற்றித்தொடுவோம்,
விண்ணில்லா வான்காண !

தீர்த்த நதி

உள்ள துயரங்கள்,
காலத்தால் மறையலாம்,
சில கரங்களால் அழியலாம்,
சில வெற்றிகளால் வெல்லலாம்,
ஆனால், உறவு துயரத்திற்காக,
சிந்திய சில துளி கண்ணீர்,
பேரணையாய் தேக்கிவைப்பேன்,
என் தீர்த்த நதியாய் போற்றிவைப்பேன்!
காலத்திற்காய் வேண்டிநிற்பேன் !

சுமைதாங்கி

"உன்னோடு நிற்கிறேன்",
உயிர் கொடுக்கும் சொற்கள் !
உழைப்பிற்கு உயிர்கொடுக்கும்,
கனவுகளுக்கு உயிர்கொடுக்கும்,
நம்பிக்கைக்கு உயிர்கொடுக்கும்,
வெற்றிகளை எளிதாக்கும்,
தொட்டுதொடரும் பயணம்,
வாழ்நாள் எல்லாம் தொடரட்டும் !

மாணிக் பாட்ஷா

மூக்கின் அழகுக்கு முன்னூறு கவிதை படைக்கலாம் கவிதை சமைப்பதைத் தாண்டி மூக்கின் சரிவில் சறுக்கி விழுந்தால் என்னாவது சுயமரியாதைக்கு பங்...