Friday 29 October 2021

அம்மா

மூவர் உயிர் வளர்த்து
ஓராயிரம் ஆடு வளர்த்து
மகளாய் மாண்பு வளர்த்து
மனைவியாய் ஆயுள் நிறைத்து
முதுமையில் தனித்து நின்றாய்!
பொழுதெல்லாம் தோட்டத்தில்
ஓடி ஓடி உழைத்தபின்
வரும்வழியில் விறகு தேடி
வீடு வந்து சோறு செய்து
அனைவருக்கும் பங்கிட்டு
அடிப் பத்தலை சுரண்டி உண்ட
அபூர்வ பிறவியன்றோ!
காண முடியுமோ 
உன்னைப்போல் ஒருவர்?
பேசி முடியுமோ உன் பெருமை?
கருவாடு சமையல் குறிப்பும்
பனியாரம் செய்யும் முறையும்
உன்னிடம் கேட்டு கற்றேனே
சளி நீக்கும் வீட்டு வைத்தியமும்
சம்பிரதாய சந்தேகங்களும்
உறவு முறையின் குழப்பமும்
உன்னிடம் கேட்டு தெளிந்தேனே
கருத்தில் நீங்குமோ?
கற்று தந்த அத்தனையும்!
அமரவைத்து அறுசுவை
இன்முகத்துடன் தந்தாயே!
ஒத்தையாய் சமைத்து
கால் கடுத்தும்
பக்கத்தில் நின்று பரிமாறுவாயே
இன்னும் ஒன்றுவாங்கிக்கொள்
உன்னையன்றி யார்திணிப்பார்?
பரிசும் பணமுடிப்பும்
பண்டிகையில் யார் தருவார்?
போனில் பேசும் முதல் சொல்லில்
சளியா ம்மா யார் அறிவார்?
எப்ப வர்ரே எப்ப வர்ரே
நூறுமுறை யார் கேட்பார்?

காண முடியாமலும் உனை
பேண முடியாமலும்
விண்ணைத் தொட்டு
என்ன பயன்?


சு.தெய்வானை
குறிப்பு : அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்.

No comments:

Post a Comment

துணை

துணை எது ? வெற்றி விலகினாலும், உறவு உதறினாலும், துன்பம் துரத்தினாலும், வறுமை வாட்டினாலும், உற்ற நிழலாய் வருவது, துணிவே ! துணிவே "துணை&q...