Sunday 10 April 2022

திருமலை மாமா



வார இறுதியில் வந்துசெல்லும்
அக்கா மகளுக்கு
தலைக்கு தேங்காய் எண்ணையும்
துவைக்க நிர்மா சோப்பும்
குளிக்க லைபாய் சோப்பும்
கொரிக்க மிக்சரும் முறுக்கும்
வாங்கித்தந்து பஸ் ஏற்றிவிடுவார்
சம்பூர்ணா தியேட்டரில்
எங்கேயோ கேட்ட குரல்
லட்சுமி தியேட்டரில் 
எங்க ஊரு பாட்டுக்காரன்
இன்னும் பல
ராமராஜன் படங்கள்
சனிக்கிழமை ஸ்பின்னிங் மில் 
என்னையும் அழைத்துசெல்வார்
மதியம் பரோட்டா குருமா
இரவு தோசை வாங்கித்தருவார்
ஞாயிறு காலையில் சுடச்சுட
எலும்புக்குழம்பும் இட்லியும்
இரவு 9 மணிக்கு 
கண்ணம்மா அக்கா வீட்டிற்கு
போகிறேன் என்றால்
காலையில் போ என்ன அவசரம்
என்று சொல்லி அனுமதிக்கமாட்டார்
டாக்டரிடம் அழைத்து சென்று
ஒல்லியாகவே இருக்கிறாள்
உடம்பே தேறவில்லை
என்னன்னு பாருங்க என்பார்
பஸ் ஏற்றிவிட வந்தால்
பத்தடி தள்ளி நிட்பார்
ஏன் மாமா என காரணம் கேட்டால்
உன் கூட படிக்கும் பிள்ளைகள்
பார்த்தால் அசிங்கமாய் நினைப்பார்கள்
என்று சொல்லி தூரமாய் நிட்பார்
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்
தோற்றத்தால்  குறைந்தவர்
உள்ளத்தால் உயர்ந்தவர்
அன்பால் நிறைந்தவர்
நேர்மறை எண்ணங்களால்
நிரம்பி வழிந்தவர்
தவறு காணும்போது
வலிக்காமல் சொல்பவர்
இனிய நினைவுகள் 
சொத்தாக சேர்ப்பவர் 

நானும் ஒருநாள்
யாராலும் நினைவுகூரப்படுவேனா?
எத்தனை மனிதரில்
கரைந்திருப்பேன்?

அய்யய்யோ கடவுளே
அக்காவுக்கு தங்கைக்கு
அத்தைக்கு அம்மாவுக்கு
அண்ணிக்கு பெரியம்மாவுக்கு
தோழிக்கு ஆசிரியைக்கு
ஒன்றும் தீங்காய் பெரிதாய்
நடக்கக்கூடாது என 
ஆத்மார்த்தமாய் பிரார்த்திக்கும்
உதடுகளும் உள்ளங்களும்
சம்பாதிப்பேனோ இல்லையோ !

ஒரு ஜீவன் ஆமென்றாலும்
நான் வாழ்வை வென்றவளாவேன்!

10/04/2022/16:29 PM

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...