Nathan Anderson: அதானி குழுமத்தைக் கீழிறக்கிய ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் - யார் இவர், பின்னணி என்ன?
அதானி குழுமத்தை ஆட்டம் காண வைக்கும் ஹிண்டர்ன்பர்க் நிறுவனர் நாதன் ஆண்டர்சன் பற்றியும் அவரின் ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் பற்றியும், சர்ச்சையாகும் இந்த விவகாரம் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.
ஹிண்டன்பர்க்கின் இந்த ஆய்வறிக்கை அதானி குழுமத்தை தலைகீழாகப் புரட்டிப்போட்டு, அதன் மீதான நம்பிக்கையை உடைந்தெறிந்துள்ளது. அதன் பங்குகள் நாளுக்குநாள் சரிவடைந்து உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த கெளதம் அதானி சட்டென ஏழாவது, எட்டாவது இடம் எனச் சரிந்து இன்று பதினொன்றாவது இடத்துக்கு வந்துள்ளார். இதனால் இந்த விவகாரம் உலகம் முழுவதும் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது.
அதானி குழுமத்தை ஆட்டம் காண வைக்கும் இந்த நாதன் ஆண்டர்சன் யார்?
2017ல் தொடங்கப்பட்ட 'ஹிண்டர்ன்பர்க்' நிறுவனத்தின் நிறுவனர் நாதன் ஆண்டர்சன் (38). அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் நகரத்தைச் சேர்ந்த இவர், வணிகம், பங்குச் சந்தை போன்றவற்றில் சிறந்து விளங்குபவர். கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகத்தில் பட்டம் பெற்றவர். பின்னர், பிரபல வணிக நிறுவனமான 'FactSet Research Systems Inc' நிறுவனத்தில் நிதித்துறை சார்ந்தத் துறையில் பணிபுரிந்தார். சிறிது காலம் இஸ்ரேலில் வாழ்ந்த இவர், கல்லூரி படிக்கும்போதே மருத்துவம் தொடர்பான படிப்புகளிலும் ஆர்வம் காட்டி 'Hebrew University'ல் மருத்துவப் படிப்பு (Paramedic) சம்மந்தப்பட்ட வகுப்புகளுக்கும் சென்றுள்ளார். குறிப்பாக ஆம்புலன்ஸில் அவர் உதவி பணியாளராகவும் பணியாற்றியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இருப்பினும், வணிகம் மற்றும் பங்குச் சந்தையில் நடக்கும் ஊழல்களையும் மோசடிகளையும் ஆய்வுசெய்வதையே தனக்குப் பிடித்தமானத் துறையாக தேர்வு செய்து பணியாற்றத் தொடங்கினார்.
தனது 'LinkedIn' பக்கத்தில் கூட'எந்தவொரு சிக்கலான சூழ்நிலைகளையும், பணிகளையும் சிறப்பாகச் சிந்தித்து தீர்வுகாணும் அனுபவமிக்கவர்' எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். 'Bernie Madoff’s scheme' ஊழலைக் கண்டுபிடித்த 'ஹாரி மார்கோபோலோஸ்' என்பவர் தான் இவரது முன்மாதிரியாம். பல வங்கித் துறை மற்றும் நிதித்துறை நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் பணியாற்றிய இவர், 2017ம் ஆண்டு வணிக மற்றும் பங்குச்சந்தை ஊழல்களைக் ஆய்வுசெய்து கண்டறியும் 'ஹிண்டர்ன்பர்க்' நிறுவனத்தை நிறுவினார்.
ஹிண்டர்ன்பர்க் நிறுவனம்:
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இந்நிறுவனம் இதுவரை 16க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்களை ஆய்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் பணியே பங்குச் சந்தையில் இருக்கும் பெருநிறுவனங்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு அதன் மோசடிகளை மோப்பம் பிடிப்பதுதான். பின்னர் ஆய்வுசெய்த நிறுவனத்தைக் குறித்த பங்குகள் பற்றிய விவரங்களை வெளியிட்டு முதலீட்டாளர்களின் பங்குகளின் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ள உதவும். மேலும், இடைத்தரகர் போல செயல்பட்டு வீழ்ச்சியாகும் எனக் கருதும் பங்குகளை வாங்கி முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் இல்லாமல் நல்ல லாபத்தில் விற்றுத்தர முயலும் (Short Selling).
ஹிண்டன்பர்க்கின் ஆய்வறிக்கையும் அதானி குழுமத்தின் வீழ்ச்சியும்:
அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு தமது பங்கு விலைகளை மிக அதிக அளவுக்கு விலை ஏற்றியுள்ளது பற்றியும் அதன் அதிகபட்ச கடன் சுமைகள் பற்றியும் ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களாக ஆய்வு செய்து 'Adani Group: How The World’s 3rd Richest Man Is Pulling The Largest Con In Corporate History' எனும் 106 பக்க ஆய்வறிக்கை ஒன்றைக் கடந்த ஜனவரி 24ம் தேதி சமர்பித்திருந்தது. மேலும், அதானி குழும மோசடிகள் குறித்து 88 கேள்விகளைத் தொகுத்து அதற்குத் தகுந்த விளக்கமளிக்குமாறு ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்திற்குச் சவால் விடுத்துள்ளது.
ஹிண்டன்பர்க்கின் இந்த ஆய்வறிக்கைக்குப் பிறகு, அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கை உடைந்து ஏராளமான முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்திருந்த பங்குகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். இதனால் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை இரண்டே நாள்களில் 20 முதல் 30 சதவிகிதம் வரை சரிந்தது.
இதன் காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் நாளுக்குநாள் வீழ்ச்சியைச் சந்திக்க, உலகப் பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த கௌதம் அதானி பதினொன்றாவது இடத்திற்கு இறங்கியுள்ளார். இதனால் நீண்ட காலமாகவே அதானி குழும பங்குகளில் முதலீடு செய்துவரும் எல்.ஐ.சி நிறுவனம் மட்டுமன்றி அதானி கடன் வாங்கியுள்ள வங்கித் துறையும் கடுமையான சரிவைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அதானி நிறுவனங்களுக்கு அதிக அளவில் பொதுத்துறை வங்கிகளே கடன் வழங்கியுள்ளதால், பொதுத்துறை வங்கிகள் பெரும் சரிவைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அதானி குழுமம், "ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை இந்தியா மற்றும் அதன் அமைப்புகள், வளர்ச்சி மீது நிகழ்த்தப்பட்டுள்ள திட்டமிட்ட தாக்குதல்" என்று தெரிவித்தது. மேலும், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கைக்குப் பதிலளித்து 413 பக்க அறிக்கையையும் வெளியிட்டிருந்தது.
அதற்கு ஹிண்டன்பர்க் நிறுவனம், "தேசியவாதம் (தேசபக்தி) எனும் பெயரில் மோசடியை மறைக்க முடியாது. அதானி குழுமத்தால் இந்தியாவின் எதிர்காலம் சரிவடைந்துள்ளது. இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம் மற்றும் பிரகாசமான எதிர்காலம் கொண்ட நாடு. அந்நாட்டின் எதிர்காலம் அதானி குழுமத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் திட்டமிட்ட முறையில் தேசத்தைக் கொள்ளையடிக்க இந்தியக் கொடியை தன் மீது போர்த்திக்கொண்டு ஒளிந்திருக்கிறது. எங்களின் முக்கிய குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமத்தின் பதில் தெளிவாக இல்லை" என்று காட்டமாகப் பதிலளிதிருந்தது.
ஒருவேளை, இந்த ஹிண்டன்பர்கின் ஆய்வறிக்கையின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை என்றால் அதானி குழுமம் பழைய நிலைமைக்குத் திரும்ப வாய்ப்புள்ளது. ஆனால், இவை உறுதிப்படுத்தப்பட்டால் அதானி குழுமம் மட்டுமின்றி அக்குழுமம் கடன் வாங்கியுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் பெரும் சரிவைச் சந்திக்கும் சூழல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த விவகாரம் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
அந்த ஆய்வறிக்கையில் அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு தமது பங்கு விலைகளை மிக அதிக அளவுக்கு விலை ஏற்றி உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மொரீஷியஸ், ஐக்கிய அரபு நாடுகள் (அமீரகம்) மற்றும் கரீபியன் தீவுகள் போன்ற வருமான வரி சொர்க்கபுரியான நாடுகளிலிருந்து போலியாக கம்பெனிகளைத் தோற்றுவித்து அதன் பங்குகளை விலை ஏற்றியதாகப் பல்வேறு சான்றுகளை அந்த ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.
மேலும் அதானி குழுமத்தில் பெரும்பாலான பங்குகள் அந்த நிறுவனத்தின் குடும்பத்தைச் சார்ந்த நபர்களிடம் மட்டும் இருப்பது பற்றியும் பல்வேறு சான்றுகள் தரப்பட்டிருந்தன. அந்த நிறுவனத்தின் உண்மையான மதிப்பிலிருந்து தற்போதைய பங்குகளின் விலை 85% அதிகமாக இருப்பதாக ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும், அதானி நிறுவனம் வாங்கியுள்ள அதிகபட்ச கடன் பற்றியும் அது குறித்து கிரெடிட் சைட் நிறுவனம் முன்பு வெளியிட்ட ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டியும் பல்வேறு கேள்விகளை ஹிண்டன்பர்க் நிறுவனம் எழுப்பியுள்ளது. மொத்தமாக பல்வேறு விதமான 88 கேள்விகளை அதானி குழுமத்திடம் அந்த ஆய்வறிக்கை முன் வைக்கிறது.
அதானி நிறுவனத்தின் பங்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 முதல் 20 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், அந்த ஆய்வறிக்கை அதானி குடும்பத்துக்கு அரசிடம் கிடைத்துள்ள சலுகைகள் பற்றியும், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி இந்தத் தவறுகளைக் கண்டும் காணாது இருப்பது பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த ஆய்வறிக்கை தான் ஒட்டு மொத்த பங்கு சந்தையிலும் முக்கிய பேசுபொருளாக தற்போது விளங்குகிறது. இந்த ஆய்வறிக்கை வெளியான புதன்கிழமை அன்று அதானி குழுமத்தின் பெரும்பாலான பங்குகள் 5% முதல் 8% வரை சரிவுடன் முடிந்தன.
இந்த ஆய்வறிக்கை பற்றி உடனடியாகக் கருத்து வெளியிட்ட அதானி நிறுவனம், தொடர் பங்கு வெளியீடு ஆரம்பிக்கும்போது வேண்டுமென்றே நிறுவனத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்குப் புறம்பான விஷயங்களைத் திரித்து ஷார்ட் செல்லிங் மூலம் லாபம் கிடைப்பதற்காக ஹிண்டன்பர்க் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், நம் நாட்டிலோ, அமெரிக்காவிலோ ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு எதிராக இது தொடர்பாக வழக்கு தொடுப்பதற்கு முன்னெடுப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வரும் விஷயங்களாகவே இருக்கின்றன. தனது லாபத்துக்காக ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது என்று மூத்த முதலீட்டாளர்களும் கூறி வருகின்றனர்.
சென்ற டிசம்பர் அன்று அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியிடம் நிறுவனம் பெற்றுள்ள அதிகப்படியான கடன் பற்றியும் பங்குகள் விலை அதிகரித்து வருவது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டபோது தமது நிறுவன கடன்களைப் பற்றி முதலீட்டாளர்களோ, கடன் கொடுக்கும் வங்கிகளோ எப்போதும் கேள்வி எழுப்புவதில்லை. அவர்கள் அனைவருக்கும் தமது நிறுவனத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு தமது நிறுவனம் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக வரும் காலத்தில் விளங்கும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் கருத்துக்கு வலுசேர்க்கும் விதத்தில் புதன்கிழமை அன்று ஆங்கர் முதலீட்டாளர்கள் பிரிவில் ஒதுக்கப்பட்டிருந்த 6,000 கோடி ரூபாய் பங்குகளுக்கான விண்ணப்பத்துக்கு விற்பனைக்காக 9,000 கோடி ரூபாய் அளவுக்கு விண்ணப்பங்கள் வந்திருந்தன. பிரபல வெளிநாட்டு முதலீட்டாளர்களான மலேசியாவைச் சேர்ந்த மே பாங்க், மார்கன் ஸ்டான்லி, நமது நாட்டின் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களான எல்.ஐ.சி இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி லைஃப், எஸ்.பி.ஐ லைஃப் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தப் பிரிவில் பங்குகளுக்கு விண்ணப்பித்திருந்தன. ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான பிரிவில் ஒன்றரை மடங்கு அதிக விண்ணப்பம் இந்த நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் மீது முதலீட்டாளர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
என்றாலும் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் வரலாற்றையும் நாம் புறம் தள்ளிவிட முடியாது. இதுவரை அந்த நிறுவனம் 30 நிறுவனங்களைப் பற்றிய ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த ஆய்வறிக்கை வெளியான நாளில் சராசரியாக அந்த 30 நிறுவனங்களும் 15% விலை குறைந்தது. அறிக்கை வெளியான ஆறு மாதங்களில் அந்த 30 நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 26% குறைந்து வர்த்தகமாகியது. அதனால், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் தாக்கம் வரும் காலத்தில் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால், இந்த ஆய்வறிக்கை காரணமாக அதானி நிறுவனங்களின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 48,000 கோடி ரூபாய் பங்கு விலை மாற்றம் காரணமாகக் குறைந்துள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் உலக அளவில் மூன்றாவது பணக்காரராக இருந்த கௌதம் அதானி புதன்கிழமை சரிவுக்குப் பிறகு நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். டெஸ்லா நிறுவனர் மீண்டும் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தொடங்கும் தொடர் பங்கு வெளியீட்டுக்கான முதலீட்டாளர்களின் ஆர்வம் எவ்வாறு இருக்கப் போகிறது என்ற முக்கிய கேள்வி எழுந்துள்ளது. அதானி குழுமம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க இருப்பதைப் பற்றி ஹிண்டன்பர்க் நிறுவனத்திடம் கேள்வி கேட்கப்பட்டபோது தாம் தன் நிலைப்பாட்டில் இருந்து மாறப்போவதில்லை என்றும் அதானி குழுமம் அமெரிக்காவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் சவால் விட்டுள்ளது
இந்தப் பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சிகளும் தற்போது கருத்து தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. அதானி நிறுவனங்களுக்கு அரசு பல்வேறு சலுகைகள் தருவதை பல்வேறு எதிர்க்கட்சிகளும் பல ஆண்டுகளாகவே புகார் கூறி வருகின்றன. 'மோடியின் செல்லப்பிள்ளை அதானி' என்று ஆரம்பித்து தொடர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. தற்போது, அவர்களின் குரல்களுக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கை அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
டிசம்பர் மாதத்துக்கான காலாண்டு முடிவுகள் தற்போது வெளிவர தொடங்கி இருக்கின்றது. இன்னும் சில வாரங்களில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பெரும்பாலான அதானி குழுமத்தில் காலாண்டு முடிவுகள் வெளிவர இருக்கின்றன. இதன் காரணமாகவும் அதானி நிறுவன பங்குகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாக வாய்ப்பிருக்கிறது.
பங்குச் சந்தைகள் தொடர்பான பல்வேறு விதமான மோசடிகள் கடந்த ஆண்டுகளில் நடந்துள்ளன. இது போன்ற மோசடிகள் நடைபெற்ற ஒவ்வொரு காலகட்டத்திலும் பங்குச் சந்தை கட்டமைப்பான செபி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு முதலீட்டாளர்கள் நலனை தொடர்ந்து காத்து வருகிறது. என்றாலும், இன்னும் பல்வேறு மோசடிகள் பங்குச் சந்தையில் தொடர்ந்தபடி தான் இருக்கிறது. அந்த மோசடியில் இருந்து காக்கும் நடவடிக்கைகளில் செபி மேலும் முனைப்பு காட்ட வேண்டும் என்பதே புதன்கிழமை கடுமையான நஷ்டத்தை சந்தித்த அதானி குழும முதலீட்டாளர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
நட்புன்னா என்னன்னு தெரியுமா?'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி நட்பு!
குஜராத் மாநிலத்தின் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்றவுடன் தொழிலதிபர் அதானியின் அசுர வளர்ச்சி தொடங்கியது.
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்... அந்த ராஜாவுக்கு ஒரு நண்பர் இருந்தாராம். ரெண்டுபேரோட நட்பு பத்தி நாடே பேசுமாம். ராஜாவுக்காக அவரோட நண்பர் எதையும் செய்வாராம்.. ராஜாவும் அப்படித்தான்' என்று தொடங்கும் குழந்தைக் கதைகளைப் போல இந்தியாவின் உறுதியான நட்புக்கு சமீபத்திய உதாரணம், நரேந்திர மோடிக்கும் கௌதம் அதானிக்கும் இடையிலான நட்பு. குஜராத்தில் சாதாரண பின்னணியில் தன் வாழ்க்கையைத் தொடங்கி, கட்சியில் இணைந்து பணியாற்றி, குஜராத் முதல்வராகப் பதவியேற்று, குறுகிய காலத்தில் இந்தியப் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஐந்தாண்டுக்கால ஆட்சியை வெற்றிகரமாக முடித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
மோடியைப் போலவே, கௌதம் அதானியும் குஜராத்தைச் சேர்ந்தவர்தான். சிறிய அளவில் வைர வியாபாரியாகத் தன் வாழ்வைத் தொடங்கிய அதானி, படிப்படியாகச் சொத்து சேர்த்து, தற்போது இந்தியாவின் டாப் பணக்காரர்களுள் ஒருவராக இருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு தற்போது ஏறத்தாழ 65 ஆயிரம் கோடி ரூபாய். அதானி குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனம் என்பதைத் தாண்டி, கடந்த சில ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரத்திலும், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களிலும் அதானி குழுமத்தின் பங்கு முக்கியமாகக் கருதப்படுகிறது.
இந்தியப் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பவராக அதானி மாறியதற்குக் காரணம், இந்தியப் பிரதமராக இருக்கும் அவருடைய நெருங்கிய நண்பர் மோடிதான். குஜராத் மாநிலத்தின் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்றவுடன் தொழிலதிபர் அதானியின் அசுர வளர்ச்சி தொடங்கியது.
2002-ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பிறகு, இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை நிகழ்த்தப்பட்டது. மோடியின் அரசியல் வாழ்க்கையில் தற்போதுவரை மிகப்பெரிய கரும்புள்ளியாக அந்தவன்முறை பார்க்கப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் படுகொலைக்காக அந்த மாநிலத்தின் முதல்வராக அப்போது இருந்த மோடியை `இந்தியத் தொழில் முனைவோர் கூட்டமைப்பு' (Confederation of Indian Industry - CII) கண்டித்தது.
இந்தியாவின் வர்த்தக நெட்வொர்க்கின் மிகப்பெரிய கூட்டமைப்பால் மோடி கண்டிக்கப்பட்டபோது, கூட்டமைப்பின் உள்ளிருந்தே அதை எதிர்த்தவர் கௌதம் அதானி. குஜராத்தைச் சேர்ந்த சில தொழிலதிபர்களுடன் `குஜராத் மறுமலர்ச்சி குழுமம்' என்ற வர்த்தகக் கூட்டமைப்பைத் தொடங்கிய அதானி, மோடிக்காக சி.ஐ.ஐ கூட்டமைப்பை விட்டு விலகப்போவதாக பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு மோடிக்கும், அதானிக்கும் இடையிலான நட்பு அதிகரித்ததுடன், இன்னும் ஆழமானது.
2003-ம் ஆண்டு, குஜராத் மாநில அரசு நடத்திய `வைப்ரன்ட் குஜராத்' என்ற தொழிலதிபர்களுக்கான மாநாட்டில், 15 ஆயிரம் கோடி ரூபாய்வரை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்தார் அதானி. அதற்குப் பிறகு, அதானியின் வாழ்க்கையில் ஏறுமுகம்தான்.
குஜராத் கட்ச் வளைகுடாவில் முந்த்ரா பகுதியில் துறைமுகம் கட்டுவதற்காக அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்கியது மோடி அரசு. ஏறத்தாழ 14 ஆயிரம் ஏக்கர் நிலம் அதானி குழுமத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஒரு சதுர மீட்டர் நிலத்திற்கு 1 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கப்பட்டு நிலம் அளிக்கப்பட்டது.
2005-ம் ஆண்டு, முந்த்ரா கிராமத்தில் கால்நடை மேய்ச்சலுக்காகக் கிராம மக்கள் பயன்படுத்தி வந்த 1,200 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலம் குஜராத் அரசால் கையகப்படுத்தப்பட்டு, அதானி குழுமத்திற்குச் `சிறப்புப் பொருளாதார மண்டலமாக' அளிக்கப்பட்டது. சிறப்புப் பொருளாதார மண்டலமாக அளிக்கப்படும் நிலங்களில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு வரி விலக்கு, மானிய விலையில் மின்சாரம் முதலான சலுகைகள் உண்டு.
தொடங்கப்பட்ட ஆறு ஆண்டுகளுக்குள் பல்வேறு சூழலியல் விதிகளை மீறியதாக அதானி குழுமத்தின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, துறைமுகத்திற்கு அருகில் இருக்கும் நவினல் கிராம மக்கள், தற்போதுவரை நீதிமன்றங்களில் முறையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு சதுர மீட்டர் நிலத்தை 1 ரூபாய்க்குப் பெற்ற அதானி, அரசு பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு அதே நிலத்தை, ஒரு சதுர மீட்டர் 600 ரூபாய் என்ற மதிப்பில் வாடகைக்கு அளித்தார். துறைமுகம், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்று, அதானியின் சொத்து மதிப்பு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. எல்லாவற்றுக்கும் பின்னால், அதானியின் நண்பராக, குஜராத்தின் முதல்வராக மோடி நின்று கொண்டிருந்தார்.
அதானியின் தொழில் குஜராத்திற்கு வெளியே, பல மாநிலங்களில் கால் பதிக்கத் தொடங்கியது. இந்தச் சூழலில், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் பிரசாரங்களுக்கு, அதானி குழும விமானங்களில் பயணித்து வாக்கு சேகரித்தார். 2014-ம் ஆண்டு, மே 16 அன்று, பி.ஜே.பியின் வெற்றி அறிவிக்கப்பட்டு, மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நாளில், அதானி குழுமம் ஒடிசாவின் தம்ரா துறைமுகத்தை 6,000 கோடி ரூபாய்க்கு வாங்குவதாகப் பெருமையாக அறிவித்தது.
மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அதே நாளில் அதானி குழுமம் தம்ரா துறைமுகத்தைப் பெற்றதும், வரவிருந்த எதிர்காலத்தைச் சூசகமாக இந்திய மக்களுக்கு அறிவித்தது.
தன் தேர்தல் பிரசாரங்களுக்கு விமானம் தந்த அதானியை, தனது வெளிநாட்டுப் பயணங்களில் இணைத்துக்கொண்டு, நட்புக்கு விசுவாசமாகச் செயல்பட்டார் பிரதமர் மோடி. அதானி குழுமத்தின் மீது தொடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசு தொடர்பான வழக்குகள், வரி ஏய்ப்பு வழக்குகள், அதானிக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக குஜராத் மாநில அரசு மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முதலியன மோடி பிரதமராகப் பதவியேற்றவுடன் முக்கியத்துவம் குறைந்தனவாகக் கருதப்பட்டன.
மோடியுடன் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த அதானிக்கு இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து, இந்திய ராணுவத்திற்கு ட்ரோன் விமானங்கள் செய்யும் ஒப்பந்தம் கிடைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு ஜி-20 மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடி, தன் நண்பர் அதானிக்கு மிகப்பெரிய பம்பர் பரிசாக, ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் கட்டுவதற்கான அனுமதியைப் பெற்றுத் தந்தார்.
ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்காக அதானி குழுமத்திற்கு, பொது வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏறத்தாழ 6,000 கோடி ரூபாய் பணத்தை கடனாக வழங்கியது. நிலக்கரிச் சுரங்கம் அமைக்கப்படும் இடம், அதானி மீதுள்ள வாராக்கடன் குற்றச்சாட்டுகள் முதலியவற்றைக் கணக்கிட்டு, வெளிநாட்டு வங்கிகள் அவருக்குக் கடன்தர மறுத்தபோதும், மோடி தலைமையிலான மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, அதானிக்குக் கடன் உதவி செய்து, தன் நட்பை வெளிப்படுத்தியது.
துறைமுகங்கள், மின்சார உற்பத்தி எனப் பெருகிய லாபத்தில், அதானி குழுமம் விமான நிலையங்கள் பராமரிப்பிலும் இறங்கியது. இங்கும் அவருக்குக் கைகொடுத்தது அவரது நண்பர் மோடிதான். அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களின் விமான நிலையங்கள் தனியார் பராமரிப்புக்காக ஏலத்தில் விடப்பட்டன. அதன் அடிப்படையில் அதானி குழுமத்திற்கு ஐந்து விமான நிலையங்களும் வழங்கப்பட்டன.
தற்போது நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி `அம்பானிக்கும், அதானிக்கும்தான் பிரதமர் மோடி சௌகிதாராகச் செயல்படுகிறார்' என்று குற்றம்சாட்டினார். தன் நட்பை இழிவுபடுத்திய போதும், ஐந்தாண்டு ஆட்சி முடியும் நேரத்தில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின் உற்பத்திக்காகக் கையகப்படுத்தப்பட்ட பழங்குடிகளின் நிலத்தை அதானிக்கு அளித்தது மோடி அரசு. நிலம் அளித்தது மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே முதல் முறையாக மின் உற்பத்தி நிலையம் ஒன்றுக்கு, `சிறப்புப் பொருளாதார மண்டலம்' என்ற அந்தஸ்தை வழங்கியது. இந்த மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், வங்காளதேசத்திற்கு விற்கப்படும் என அதானி குழுமம் அறிவித்துள்ளது.
பிரதமர் மோடியும், தொழிலதிபர் அதானியும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தங்கள் நட்பை வெளிப்படுத்திக் கொண்டனர். இங்கு நட்பு என்பதை மோடி - அதானி ஆகிய இருவருக்கும் இடையிலானது என்று மட்டும் சுருக்கிக் கொள்ள முடியாது. மோடிக்குப் பதிலாக வேறொரு பிரதமரும், அதானிக்குப் பதிலாக வேறொரு தொழிலதிபர் இருந்திருந்தாலும், இதே நிலைதான் தொடர்ந்திருக்கும். இந்தியா முழுவதும் ஒவ்வோர் அரசியல்வாதிக்கும், அவரது தகுதிநிலைக்கேற்ப இப்படியொரு தொழிலதிபர் நண்பர் இருக்கிறார். இந்த நட்பு, இந்திய அரசின் கீழ் இயங்கும் அரசியல்வாதிகளுக்கும், மிகப்பெரிய முதலாளிகளுக்கும் இடையிலான நட்பு.
அதானியின் நிறுவனங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள் குஜராத்தின் சாமான்யர்களும், ஆஸ்திரேலியாவின் சாமான்யர்களும். தேசங்கள் கடந்தும், இரு நாட்டு சாமான்யர்களின் கோரிக்கையும் ஒன்றாகத்தான் இருக்கிறது. எனினும், அவர்களுக்கு இடையிலான நட்பு பெரிதாக சாத்தியப்படவில்லை.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், மோடி மீண்டும் வெல்வாரா என்ற கேள்வி இந்தியா முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மோடியின் வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி, `மோடி அரசு மீண்டும் ஆட்சி அமைக்கும்' என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியவுடன், பங்குச் சந்தையில் அதானியின் பங்குகள் 17% வரை உயர்ந்தன. மோடியின் வெற்றிச் செய்தியாலேயே அதானியிடம் குவிகிறது லாபம். ஆம், இதுதான் உன்னதமான நட்பு!
No comments:
Post a Comment