Saturday, 20 July 2024

செல்வத்துள் செல்வம்

செல்வத்துள் எல்லாம்
சிறந்த செல்வம் நீ 

வாரி அணைக்கையில்
கள்ளூரும் இன்பம் நீ 

பொக்கை வாய் காட்டி
புன்சிரிப்பு சிரிக்கையில்
சிலையும் உன்னோடு
சேர்ந்து சிரிக்குமே 

இரவு தூக்கம் 
திருடிய இனிய கள்வனே 

ஓய்வு நேரம் குறைத்து
உன் பின்னே ஓட வைத்து
விளையாட்டு காட்டி
வேலை வாங்கிய 
முதலாளி சிறுவன் நீ 

ஒரு வருடத்தில்
ஓராயிரம் இன்பம்
எண்ணவோ
சொல்லவோ
என்னால் ஆகாது
ஆனாலும் 
அத்தனையும் சுகம்

பொறுப்பற்ற பறவையாய்
பறந்து திரிந்த
தாயை தந்தையை
பொறுப்புள்ள பெற்றோராக
மாற்றிய ஆசிரியன் நீ! 

வாடாத மலரே
வாசமிகு மல்லிகையே
வாழ்வாங்கு வாழ்க நீ 

கருவில் சுமந்தவள்
கனவில் சுமந்தவர்
இருவரும் கர்வப்பட 

உற்றாரும் உறவினரும்
உன்னால் பெருமையுற 

கற்றோரும் சான்றோரும்
உனக்கு புகழ்மாலை சூட்ட 

பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூறாண்டு
வாழ்க வாழ்கவே!

No comments:

Post a Comment

முதிர்வு

பழக்கமானவை மறந்துபோகும் அதிகநேரம் அமர்ந்தால்  இடுப்பெலும்பு வலிக்கும் முடிஅடர்த்தி குறையும் நரைக்கும் தோல்கள் கடினமாகும் தூக்கம் குறையும் வய...