Sunday, 9 July 2023

குறள் 1307

விடுப்பில் வருகிறேன் என்ற
ராணுவ வீரனின் கடிதம்
மனைவியை மகிழ்ச்சி ஆக்கும்
அடுத்த நொடியில் மறையும் அவளது மகிழ்ச்சி
இரண்டு வாரங்களே
இருப்பார் என்ற செய்தி
இன்னும் அவளை துன்பப்படுத்தும்
அதுபோலவே ஊடலால்
பிரிந்த தலைவிக்கு
அடுத்துவரும் இன்பம்
நீடிக்காமல் போகுமோ என
எண்ணி வருந்துவாள்

குறள் 1308

நீலக்குறி பெறாத 
இதயம் பெறாத  
குறுஞ்செய்திகள்
சொன்னது உன் 
அன்பின் அளவை
சுடுசொல்லில் 
சாம்பலானேன்
நீ இதை அறியாய் 
இருந்தும் நான் 
வருந்துவதேன்?
உன் புன்னகை
என் ஆக்சிஜன்
தெரிந்தும் ஏன்
கஞ்சனாகினாய்?
உன்வாசலில் 
நான் வறியவளாய்
எவ்வளவுநாள் 
காத்திருப்பது?
வருந்(த்)துவதை அறியாயோ

Wednesday, 5 July 2023

குறள் 1304

ஊடல்களும் பிணக்குகளும்
ஏராளம் இங்கே
விளையாட்டு வீரர்கள்
வீதிவந்து பிணங்கினர்
விலைவாசி உயர்வுகண்டு
மக்கள் வீதிகளில்
பிணங்கினர்
இவர்களை உணராமல்
இவர்தம் ஊடல் களையாமல்
ஊர்சுற்றும் தலைவனே
நீ வெந்நீரை ஊற்றி
ஜனநாயக வேரை அறுக்கிறாய்
மணிப்பூர் மகளாக
மருகி உருகி சாகிறேன்

பிணக்கம் களைய வருவாயோ
இல்லை பிணங்கள் எண்ண வருவாயோ
அறியாத பிள்ளையாய்
அழுது கொண்டே கேட்கிறேன்
விரைந்து வா தலைவனே
என்னை வெறுப்பு தீ
விழுங்கும் முன்னே
உன் பாராமுகம்தானே
எனை அதிகமாக சுடுகிறது
வந்தே பாரத்தைவிட
நீ வராத பாரம் சுமக்கிறேன்
அமைதி கொள் ஆருயிரே என
ஒரு வார்த்தை சொல்லாயோ

Tuesday, 4 July 2023

குறள் 1302

பார்வைகள் வேறாக
கருத்துக்கள் முரண்பட
மூக்குக்கு மேல் கோபம்
இருவருக்கும்
இரண்டுநாள் மௌனமொழி
மூன்றாம்நாள் மாலையில்
காபியோடு பக்கோடா
டேபிள்மீது அவள் வைக்க
பிஸ்தா குல்பியை
லேப்டாப் மீது அவன் வைக்க
அத்தோடு முடிந்தது
அவர்களுக்கான ஊடல்
அளந்து போட்ட உப்பாக!

அரசியல் வேண்டாம்
அவன் சொல்ல
அதெல்லாம் முடியாது
இவள் சொல்ல
வாய்மொழி சூட்டின்
செல்சியஸ் குறைய
நான்குநாட்கள்
ஐந்தாம்நாள் வீட்டுக்கு
நண்பர் குடும்பம் வந்து நிற்க
சிக்கன் வாங்கி வரவா
மீன்வாங்கி வரவா
என்பதோடு ஊடல் முடிந்தது

அளவாக பெய்யும் மழை
அளவாக சுடும் சூரியன்
அளவாக குளிரும் நிலா
அளவான ஊடல் கலை
அத்தனையும் அழகு
அளவுக்குள் அடங்கிநின்றால்!
அளவுக்கு மீறினால்
அமிர்தமும் நஞ்சு!

குறள் 1303

உரசிய தீக்குச்சி
உடனே அணைகிறது

ஏற்றிய தீபம்
எண்ணை தீர அணைகிறது

எண்ணத்தில் ஏற்பட்ட தீயும்
காயம் வரும் முன்
அணைந்திடவேண்டும்.
இல்லாது போனால்
எதுவும் இருக்காது

ஏக்நாத்தும் அஜீத்தும்
எடுத்துகாட்டு அல்லவா


தவறு யார்மீது
ஆராய்ச்சி கூடாது
ஒருவர் தோற்றால்
இருவரும் ஜெயிக்கலாம்
ஒருவர் ஜெயித்தால்
இருவரும் தோற்பார்கள்

அணைத்துவிடுங்கள்
தீயை அவளை அவனை 
அவர்களை

இல்லையேல்
எரிந்து சாம்பலாகும்
உறவும் உள்ளமும்....

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...