Wednesday 7 August 2024

மழை

காய்ந்து கிடந்த என் 
மன நிலத்தில் மழையாய் 
பொழிந்து ஈரமேற்றிய வெண்மேகமே...

இருள்கவ்விய என் 
இரவுக்குள் இன்ப வலியாய் நுழைந்து ஒளியேற்றிய பெண்ணிலவே...

சீரின்றி சிதறித்திரிந்த 
என் சிந்தைக்குள் 
அரவம் இன்றி சரணம் 
இயற்றிய இருங்காட்டுக்குயிலே...

மாலை நேர மித வெயிலில்
குளிர் காயும் கூவிரமலரே ...

மறைந்திருந்து உனை பார்க்கும் 
என் மனமதனை அறிவாயா... ❣️

என்னருகே நீ இருந்தால்...

நெடுந்தூர நடையும் 
சுடும் வெயிலும் கூட
சுகமாகுது..
என்னருகே நீ இருந்தால்... 🌹

மனதை வதைக்கும் 
சோகங்களும் மதியை 
மறைக்கும் சிந்தைகளும்
சீராகுது..
என்னருகே நீ இருந்தால்... 🌹

என்னத்தின் சிதறல்களும் 
ஏக்கங்களின் பிளிரல்களும்
இதம் காணுது..
என்னருகே நீ இருந்தால்... 🌹

விடியாதிருந்த இரவுகளும் 
விடை தேடிய இருள்களும்
வெளிச்சம் பெருகுது..
என்னருகே நீ இருந்தால்... 🌹

நீ இல்லா நேரமும் கூட 
உன் நினைவுகளால் 
இனிமையாகுது..
நெஞ்சமும் உனை
நினைத்து இசைத்து பாடுது... 🌹

Tuesday 6 August 2024

சந்தக் கவிதை

நான் 
சலிக்காமல் 
வாசிக்கும் 
சந்தக் 
கவிதையடி.. நீ 

விழிக்குள் 
ஓவியமாய் 
விந்தைக் 
கவிதை யடி!!

மொழிக்குள் 
மோனையாய் 
செழிக்கும் 
கவிதையடி.. அழகே நீ...

Saturday 20 July 2024

செல்வத்துள் செல்வம்

செல்வத்துள் எல்லாம்
சிறந்த செல்வம் நீ 

வாரி அணைக்கையில்
கள்ளூரும் இன்பம் நீ 

பொக்கை வாய் காட்டி
புன்சிரிப்பு சிரிக்கையில்
சிலையும் உன்னோடு
சேர்ந்து சிரிக்குமே 

இரவு தூக்கம் 
திருடிய இனிய கள்வனே 

ஓய்வு நேரம் குறைத்து
உன் பின்னே ஓட வைத்து
விளையாட்டு காட்டி
வேலை வாங்கிய 
முதலாளி சிறுவன் நீ 

ஒரு வருடத்தில்
ஓராயிரம் இன்பம்
எண்ணவோ
சொல்லவோ
என்னால் ஆகாது
ஆனாலும் 
அத்தனையும் சுகம்

பொறுப்பற்ற பறவையாய்
பறந்து திரிந்த
தாயை தந்தையை
பொறுப்புள்ள பெற்றோராக
மாற்றிய ஆசிரியன் நீ! 

வாடாத மலரே
வாசமிகு மல்லிகையே
வாழ்வாங்கு வாழ்க நீ 

கருவில் சுமந்தவள்
கனவில் சுமந்தவர்
இருவரும் கர்வப்பட 

உற்றாரும் உறவினரும்
உன்னால் பெருமையுற 

கற்றோரும் சான்றோரும்
உனக்கு புகழ்மாலை சூட்ட 

பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூறாண்டு
வாழ்க வாழ்கவே!

Wednesday 26 June 2024

புளியோதரை

அறிமுகமில்லாத நகரத்தில்
அருகிலுள்ள கோவிலில்
அம்மனை தரிசித்து
புளியோதரையோடு 
படியில் அமர்கையில்
அம்மாவின் நினைவுகள்
அலைகளாய் வரும்

புளியோதரை வாங்காமல்
உங்கம்மா வரமாட்டாள் பாரேன்
என கிண்டலடிக்கும்
அப்பாவோடு சேர்ந்து சிரித்த
ஞாபகங்கள்
பிரசாதம் கிடைக்கலைனா 
ஆசீர்வாதம் கிடைக்காதமாதிரி என
பிடிவாதமாக வாங்கிவந்து
வேண்டாம்னு சொல்லாதே
ஒரு வாயாச்சும் சாப்பிடு
என திணித்த நாட்களின் 
நினைவுகள் வர

பனித்த கண்களோடு
திண்ணும்போது
புளியோதரை லேசாய் 
உப்புக் கரித்தது.

Saturday 11 May 2024

சாரி

சாரி சொன்னேன்
பதிலில்லை

புரிந்துகொண்டேன்
கோபம் என! 

சுகந்தம்

அழைப்பும்
பார்வையும்
மின்சாரம்!
எனக்காக
வந்ததுபோல்
உள்ளுணர்வு

உண்மையா என
உன்னிடம் 
நெருங்கும்போது
கேட்கிறேன்.
ஆம் என்று 
சொல்லிவிடு
அதற்காக ஆசைப்படுகிறேன்

தயாராகி வந்தேன்
உன்னில் கலந்துவிட
தயக்கம் வந்து
தலைதூக்க
தள்ளி அமர்ந்து
திரும்பிவந்தேன்

எண்ணங்களை 
திருடி ஆராயவேண்டும்
என்ன நினைத்தாய் என

ஏற்பாயா
தவிர்ப்பாயா

எப்போது வருவாய்
எதிர்பார்ப்போடு
காத்திருக்கிறேன் 



Tuesday 30 April 2024

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்?

தான் எழுதிய தேர்வுத்தாளை தானே
மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்?

நீ நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ உன்னை கவனித்த அடுத்த மனிதர்கள் தானே சொல்லவேண்டும், நீயே எப்படி சொல்லிக்கொள்கிறாய்?

சுயமதிப்பீடு எப்படி சரியாகும்? 

Saturday 30 March 2024

துணை

துணை எது ?
வெற்றி விலகினாலும்,
உறவு உதறினாலும்,
துன்பம் துரத்தினாலும்,
வறுமை வாட்டினாலும்,
உற்ற நிழலாய் வருவது, துணிவே !
துணிவே "துணை"  ஆனால்,
துயர் ஏது ?

துவழும்போதெல்லாம்
ஊக்கம்கொடுப்பாள்,
தடுமாறும்போது,
ஊன்றுகோலாவாள்,
இடரும்போது,
தாங்கிப்பிடிப்பாள்,
துணை அவள் துணிவே !
வாழ்க்கை அலையில்,
வெற்றிக்கரை அழைத்துசெல்வாயா ?
வெற்றித்திருமகள் துணையே !

Friday 1 March 2024

ராகுல்காந்தி

கருப்புக்குடையாய்
வெறுப்பு வெப்பத்தை
உள்வாங்கினீரோ
உன்குடைக்குள்
மக்கள் ஆசுவாசப்பட!

எல்லைச்சாமியோ
கருப்பண்ணசாமியோ
இரண்டும் நீதானய்யா
ஏழைகளுக்கு

மதமும் வெறுப்பும்
எங்களை தின்றுவிடாமல்
இருக்க எல்லையில் நின்று
பாதுகாக்கும்
கருப்பண்ணசாமி நீதான்

சமூக இருட்டை
உள்வாங்கி
ஆடையாய் அணிந்தீரோ!

ஆயினும் அது உம்மை
பாதிக்கவிடாமல்
வெள்ளை உள்ளத்தால்
பளிச்சிடும் புன்னகையால்
தற்காத்துக்கொண்டீரோ

வாழ்க நீ
வளர்க தேசம்

இனிய காலை வணக்கம்
உங்களுக்கும்!
என் நண்பர்களுக்கும்!

D and N

D:  My little bird The time has come to fly away Now onwards your world is different than mine Not only time zone and climate...