Thursday 25 November 2021

சலிப்பு

காதலும் சலிக்கும் 
       காலம் மாறினால்
காதலியும் சலிப்பாள் 
       கல்யாணம் ஆனால்
நட்பும் சலிக்கும்
      நகைப்பு குறைந்தால்
உணவும் சலிக்கும்
       சமைப்பவர் மாறினால்
உடையும் சலிக்கும்
       ரசிப்பவர் மாறினால் 

உரையாடல் சலிக்கும்
      ஒருவரே பேசினால்
பணமும் சலிக்கும்
     கேட்பார் குறைந்தால்
புகழும் சலிக்கும்
     புகழ்வோர் மிகுந்தால்
கருணை சலிக்கும்
     கைகள் அதிகமானால்
விளையாட்டு சலிக்கும்
     விருதுகள் குறைந்தால் 

குளிரும் சலிக்கும்
     மார்கழி நீண்டால்
வெயிலும் சலிக்கும்
    வெப்பம் மிகுந்தால்
மழையும் சலிக்கும்
    விடாமல் பெய்தால்
துணையும் சலிக்கும்
       நிம்மதி குறைந்தால்
வேலையும் சலிக்கும்
      தூக்கம் மிகுந்தால் 

சலிக்காத ஒன்றை
     சல்லடையில் தேடினேன்
கிடைக்கவே இல்லை
     மறுபடியும் சலிப்பு
எல்லாம் சலிக்கும் 
      இயற்கையின் விதி !!!


Wednesday 24 November 2021

தோழிக்கு கடிதம் -3

தோழிக்கு கடிதம் -3


அன்புள்ள தோழி
தினமும் பூக்கும் இத்தனை பூக்களை என்ன செய்கிறாய்? சாமிக்கு சாத்தி வாடிய மலர்கள், தலையில் சூடி வாடிய மலர்கள், வேஸில் வைத்து வாடிய மலர்கள் அனைத்திற்கும் மறுவாழ்வு தரவேண்டும் என்று எப்போதாவது நினைத்ததுண்டா?. வாடிய மலர்கள் அத்தனையும் சேர்த்துவைத்து காம்புநீக்கி காயவைத்து, வேலையில்லாத நேரங்களில் மிகவும் 'போர'டிக்கும்போது மிக்ஸி யில் அரைத்து சப்பாத்தி மாவு போல பிசைந்துகொள்ளவும். சிறு உருண்டைகளாக்கி மெல்லிய ஈர்க்குச்சியை சுற்றி கைகளால் உருட்டவும். இதை நிழலில் உலர்த்தி பாலித்தினில் பத்திரப்படுத்தவும். தினமும் மூன்று குச்சிகள் உன் வீட்டு அறைகளை வாசப்படுத்தும். உன் உழைப்பில் உருவான ஊதுவத்திகளுக்கு இன்னும் வாசனை கூடும். நீ மிகவும் Busy என்றால் உன்னைச்சுற்றி இருக்கும் இன்னொருவருக்கு வாய்ப்பை கொடு. மலருக்கும் இன்னொரு மனிதருக்கும் மறுவாழ்வு கிடைக்கும்.

பிரியங்களுடன்
தெய்வானை

Sunday 21 November 2021

அளவும் காலமும்

பசிக்கும்போது 
       கொடுக்காத பாலும்
பசிக்காதபோது 
       கொடுக்கும் பாலும் வீணே!! 

தேவையான நேரத்தில் 
       கிடைக்காத பாராட்டும்
தேவையில்லா நேரத்தில் 
       கிடைக்கும் பாராட்டும் வீணே 

நேரத்தில் கிடைக்காத நீதி
     நேரமாகி கிடைத்த நீதி 
வாதியைப் பொருத்தவரை
      இரண்டும் வீணே! 

மனம் விரும்பாத நேரத்தில்
     ஒலிக்கும் இசையும்
மனம் விரும்பும் நேரத்தில்
     கேட்கும் சத்தமும் வீணே

ஐந்து வருடம் உழைத்தவனுக்கு
     ஆயுளுக்கும் ஊதியமும்
ஐம்பது வருடம் உழுதவனுக்கு
     ஐந்து ரூபாய் எலிமருந்தும் வீணே

உடலே அசைக்காதவனுக்கு
      உணவுவகை ஐந்தாறும்
ஓடி ஓடி உழைத்தவனுக்கு
      ஒரு பிடி சோறும் மோரும் வீணே

அளவும் காலமும்
      மிகமிக அவசியம்
அளவு மிஞ்சினால்
      வேலையில்லை என்பர்
காலம் கடந்தால்
      தேவையில்லை என்பர்

இன்றைக்கு ஏனிந்த ஏகாந்தமோ

இன்றைக்கு ஏனிந்த ஏகாந்தமோ
ஞாயிற்றுக்கிழமை வேலைகளோ

அடுத்த சனிவரை தேவையான
மாவு அரைத்து முடியலையோ

மதிய வேளை சாப்பாட்டுக்கு
மட்டன் பிரியாணி தயாரிப்போ

வாரம் முழுவதும் சேர்த்துவச்ச
அழுக்கு மூட்டை அலசலோ

அவசரமாக அழைப்புவந்து
அம்மா வீட்டுக்கு பயணமோ

அடுத்தமாத கல்யாணஅழைப்புக்கு
அன்பளிப்பு வாங்க ஷாப்பிங் கோ

இன்றைக்கு ஏனிந்த ஏகாந்தமோ

ஆபீஸின் மெயிலுக்கு
ஆசுவாசமாய் பதில் டைப்பிங் கோ

அடித்து அடித்து திருத்தி
ப்ராஜக்ட் ரிப்போர்ட் ரைட்டிங் கோ

திரையரங்கில் திரைப்படமோ
நெட்ப்ளிக்ஸ் ல் சீரியலோ

இன்றைக்கு ஏனிந்த ஏகாந்தமோ

Friday 19 November 2021

தோழிக்கு கடிதம் - 2

அன்புள்ள பார்கவி
நீ ஒரு நல்ல பாடகி. குரல்வளம் அருமை.
நீ கேட்கும் , பாடும்,பாடல்களின் அருமை பெருமைகளை, பாடல் ஆசிரியர் வரிசையில், இசை அமைப்பாளர் வரிசையில் ஒரு பக்க அளவில் Samsung Notes ல் type செய்து Google blogger ல் Upload செய்யவும். Gmail id இருந்தால் போதுமானது. Google apps  ல் Blogger app search செய்து போனில் Install செய்யலாம். மேலும் AnchorFM , Spotify இரண்டும் Playstore ல் கிடைக்கும். போனில் Download செய்யவும். Anchor FM ல் நீ பாடி பதிவுசெய்து Spotify ல் Publish செய்யலாம். Spotify link ஐ உன் Blog லும் ,D block லும் Share செய்யலாம். படிப்பது பிடித்தவர் Blog ஐயும், கேட்பதை பிடித்தவர் Spotify யும் தொடரட்டும்.  நேரம் கிடைக்கும்போது பழைய , புதிய, நம் காலத்திய பாடல் விமர்சனங்கள் சேர்த்துக்கொண்டே போகலாம்.  பாட்டில் உனக்கு பிடித்த வரிகள் பற்றி, அந்த சீனில் நடிகரின் Expressions பற்றி  கருத்துகள் அனைத்தையும் பதிவுசெய். எப்படியும் உனக்கு 60 Followers கண்டிப்பாக கிடைப்போம். முதல் Follower  ஆக நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைவேன். மில்லியன் Subscribers, மில்லியன் Views முதலில் எண் ஒன்றிலிருந்து தொடங்கப்பட்டவையே!. ரங்க நாயகி பட்டம் தாண்டி "பார்(ஆளும்)கவி" அடையாளம் வேண்டும் .  WE ARE WAITING !!! 

Thursday 18 November 2021

தோழிக்கு கடிதம் - 1

அன்புள்ள விஜி 

நீ படிக்கும் புத்தகங்களின் விமர்சனம் ஒரு பக்க அளவில் Samsung Notes ல் type செய்து Google blogger ல் Upload செய்யவும். Gmail id இருந்தால் போதுமானது. Google apps  ல் Blogger app search செய்து போனில் Install செய்யலாம். நேரம் கிடைக்கும்போது விமர்சனங்கள் எழுதி Upload செய்யலாம். நான் உன்னை வாசித்ததில் தெரிந்துகொண்டது நீ ஒரு நல்ல விமர்சகர். கண்கள் காந்தம் போல இரும்பான விசயங்களை ஈர்க்கிறது. புத்தகத்தில் உனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் பற்றி, எழுத்தாளர் சொல்ல வந்த விசயங்கள், உனக்கு உடன்பாடு இல்லா கருத்துகள் அனைத்தையும் பதிவுசெய். எப்படியும் உனக்கு 60 Followers கண்டிப்பாக கிடைப்போம். பிடித்த சினிமாக்கள்,  பிடிக்காத மனிதர்கள் அத்தனையும் பதிவு செய்.  மில்லியன் Subscribers, மில்லியன் Views முதலில் எண் ஒன்றிலிருந்து தொடங்கப்பட்டவையே!. Mrs Vijay, Neha's mother  தாண்டி " The Vijaylaxmi" அடையாளம் வேண்டாமா? . கிளம்பியாச்சா?  Good Good. 

Wednesday 17 November 2021

பாஞ்சாலி

இல்லை என்று சொல்லாத
     தரும சிந்தனை(தருமன்)
கொண்ட நோக்கத்தில்
    தெளிவான அறிவு(அர்ச்சுனன்)
எதிரில் நிற்போரை
   வெல்லும் உடல்வலிமை(பீமன்)
வயிர்வழி உயிர் தொட
   சமையலில் புலமை(நகுலன்)
எதிர்காலத்தை கணிக்கும்
   துல்லிய திறமை(சகாதேவன்) 

ஐந்து குணத்தையும் மணப்போர்
    வாழ்வில் சிறப்பர்
பெண்ணை துயில் உரிக்க
    காத்திருக்கும் சபையில்
கிருஷ்ணர் வந்தாலும்
    வராவிட்டாலும்
கௌரவர் மத்தியில்
    எப்போதும் ஜெயிப்பர்

ஓடு.......தேடு.......


ஜெயிக்கணுமா
     கண்ணம்மா
ஜெயிச்சுக்கிட்டே 
     இருக்கணுமா 

ஒருமுறை 
     ஜெயித்தால் போதாது
ஒவ்வொரு முறையும்
      ஜெயிக்கணுமே
முதல்முறை தோற்றால்
      பாதி கூட்டம் ஓடும்
இரண்டாம் முறை தோற்றால்
      மீதி கூட்டம் ஓடும் 

முயற்சித்தே இரு
      பயிற்சித்தே இரு
பயத்துடனே என்றாலும்
       காலை முன்னே வை
ஓடிக்கொண்டே இரு
       தேடிக்கொண்டே இரு
ஓய்வென உட்கார்ந்தால்
        ஓரங்கட்டப் படுவாய் 

சூரியன் ஓய்வு என்றால்
       வெளிச்சம் ஏது நமக்கு
நொடிமுள் ஓய்வு என்றால்
        நேரம் ஏது நமக்கு
இதயம் ஓய்வு என்றால்
        வாழ்வு ஏது நமக்கு
உழவன் ஓய்வு என்றால்
        உணவு ஏது நமக்கு 

உன்னைச்சுற்றி எல்லாமே
       ஓடிக்கொண்டு இருக்கும் போது
உனக்கு மட்டும் எதற்கு
      ஓய்வு வேண்டும் என்கிறாய் 
ஜெயிக்கணும் என்றால்
        ஓடிவிட்டு நில்
ஜெயித்து கொண்டே இருக்க
       ஓடிக்கொண்டே இரு

ஆனந்த கிறுக்கல்



சேர்ந்துசிரித்த ஞாபகமோ
சண்டையிட்ட ஞாபகமோ
விடுதியில் தவித்தபோது
சோறு தந்த ஞாபகமோ
கரூரில் இருவரும்
படம் பார்த்த ஞாபகமோ
கிரிக்கெட்டும் கிட்டிபுல்லியும்
விளையாண்ட ஞாபகமோ
சைக்கிளில் டபுள்சில்
காமாட்சிபுரம் சென்ற ஞாபகமோ

என்னதான் நினைப்போ
இப்படி கிறுக்கி வைக்க
அத்தை மகன் ஞாபகமாய்
ஆனந்தின் கிறுக்கல்கள்

Tuesday 16 November 2021

அப்பா

ஊருக்குள்ள பிரச்சினையோ

உறவுக்குள்ள மனவருத்தமோ

ஓடி வந்து தீர்த்து வைப்பார் 


ஊரெல்லாம் சுற்றி வந்த

சைக்கிளும் டீவிஎஸ் ம்

உம் அருமை மறந்திடுமா

வாழ்வெல்லாம் பயணித்த

உம்முடனே மறைந்திடுமா 


சாந்தி வந்து சேருமோ

மீந்திருப்போர் வாழ்விலே 


நிதானமும் நிம்மதியும்

சொத்து போல 

சேர்த்து வைத்தார்

சொந்தங்களை கூட

சொத்தாகவே பார்த்தார்

அமரவைத்து புத்திமதி

இன்முகத்துடன் சொன்னார்!

ஒத்தை லட்சம் கேட்டால்

இரண்டாய் தந்துவிட்டு

இன்னும் வேண்டுமா,

உம்மையன்றி யார் கேட்பார்?

பரிசும் பணமுடிப்பும்

பண்டிகையில் யார் தருவார்?

எப்ப வர்ரே எப்ப வர்ரே

நூறுமுறை யார் கேட்பார்? 


காண முடியாமலும் 

பேண முடியாமலும்

கண்ணில் நீர் தந்து

விண்ணைத் தொட சென்றவரே

விம்முவது கேட்பீரோ



இப்படிக்கு 


ஈற்றும்

பேற்றும்


சாரி

சாரி சொன்னேன் பதிலில்லை புரிந்துகொண்டேன் கோபம் என!