Friday 10 March 2023

குறள் 1204



(சமையலறையில் நான். ஜன்னலில் பழுப்பி. காலை 7மணி)

பழுப்பி : மீமீ.... மியாவ்வ்.. யாயா?
நான் :  பாலூற்றும் மாமா ஊருக்கு போயிட்டார்

பழுப்பி : யாவ்மி... மமியாவ்..மிவ்யாயா?
நான்: எப்ப வருவார்னு சொல்லலைடி

பழுப்பி: மியாவ்..மியாவ்மியாவ். மிவ்வ்மி
நான்: என்னையே நினைச்சுக்குவாரா தெரியலை. இதுல உன் ஞாபகம் வருமானு வேற கேக்குறே. ஆசைதான்டி உனக்கு!

பழுப்பி: மியாவ்மி மிமிமி யாவ்மி மிவ்
நான்: ஏன் நான் பால் ஊற்றினா ரதிக்கு தொண்டைல இறங்காதா? அவரேதான் ஊத்தணுமா?
பழுப்பி: யாவ்மி வயாவ்மி மியாவ்!
நான்: சரி சரி புலம்பாதே பால் கொண்டு வரேன்.


Compliments : 

Wednesday 8 March 2023

குறள் : 1201

காக்கைச் சிறகினிலே நந்தலாலா அவள் கருங்கூந்தல் தோன்றுதடா நந்தலாலா 
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா அவள்
பச்சைநரம்புகள் தோன்றுதடா நந்தலாலா 
கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா அவள்
குரலே இசைக்குதடா நந்தலாலா 
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா அவளை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

குறள் :1202

நீளும் நேரங்கள்
நினைவுகளால்
நிறைகிறது
கடக்கும் பாதைகள்
கடந்த பாதங்களை
கைகோர்த்து நடந்த
நிமிடங்களை
ஞாபகப்படுத்துகிறது
தொலைவில் கேட்கும்
ராகங்கள் எனக்காக
நீ பாடிய வரிகளை
நினைக்க வைக்கிறது
உடல் பிரிந்தால் என்ன
உள்ளம் சேர்ந்தால் 
போதாதா?
நினைவாலே
சிலைசெய்து
நித்தம் உனை
பூஜிக்கிறேன்!

compliments :

மகளிர் தின வாழ்த்துக்கள்

பெண்ணே!
பொன்னே!
உன்னை நீ அறிவாய்!

உனக்கு
போருக்கு
தலைமைதாங்கி
வெல்லும்
வலிமையுண்டு
வங்காளப்போர்
வரலாறு
படித்தாயா

எதிர்ப்பது என
முடிவானால்
எவருக்கும்
பணியாதே!
அஞ்சாமை
சொல்லுக்கு
பொருளாகவேண்டும்
அணுவை ஆராய்வோம்
ஏழ்மையை
ஒழிப்போம்

அலட்டாமல்
அசராமல்
அஞ்சாமல்
சூழ்நிலையை
புரிந்துகொண்டு
வென்றுகாட்டுவோம்
ஆண்கள்சூழ்
அரசியலில்
நமக்கென்று
தடம்பதிப்போம்

தடுப்பையும்
தாண்டுவோம்
அண்ணனுக்கும்
தம்பிக்கும்
நம்பிக்கை
தந்திடுவோம்

கஷ்டத்தில்
பங்குகொண்டு
காலமெல்லாம்
உடன் இருப்போம்

இனிய மகளிர்
தின வாழ்த்துக்கள்!

குறள்:1203

காதலர்
மோதி
தும்மல்
மூவரும் ஒன்று

ஒருவர்
நினைப்பது
போல் நடித்து
நினைக்காது
மறப்பார்

மற்றவர்
கொடுப்பது
போல் நடித்து
எடுத்துகொள்பவர்

4% அகவிலைப்படி தந்து
18% சேவை வரி பிடிப்பார்

தும்மல் வருவது
போல நடித்து
வராமல் துன்புறுத்தும்

ஆக மூவரும் 
ஒரே குட்டையில்
ஊறிய மட்டைகள்!

Sunday 5 March 2023

குறள் : 1200

இரக்கமே இல்லாத
தலைவனிடம்
சிலிண்டர் விலை
அம்பது ரூபாய்
ஏற்றியது ஏன்
என கேட்பது 
செவிடன் காதில்
ஊதிய சங்குபோல!

அப்படித்தான்
இருக்கிறது
ஆசையே இல்லாத
ஆடவனிடம்
அன்பை எதிர்பார்ப்பது
கடலை தூர்ப்பது
போல கடினமானது!

நான் என்ன
வேட்பாளரா
கைகூப்பி
வணங்கி
அன்பு ஓட்டு
கேட்டுவாங்க?

Comments :

Saturday 4 March 2023

குறள் 1199

கோபம்
என்றால்
கொட்டிவிடு

சனியனே
சொல்லும்
தித்திக்கும்

மௌனம்
மட்டும்
காக்காதே

வருத்தம்
என்றால்
சொல்லிவிடு

முகத்தை
மட்டும்
திருப்பாதே

எதிரெதிரே
சந்திக்கையில்

நலமா என்று
கேட்கவேண்டாம்

ஏறெடுத்தாகிலும்
பார்த்துவிடு

அப்பாவா
காதலா
குழப்பத்தில்
அப்பாவை
தேர்ந்தது
தவறுதான்!



Friday 3 March 2023

குறள் : 1198

பிரியும்போது
தந்த முத்தத்தின்
ஈரம் காயாமல்
தினந்தோறும்
கண்ணீரால்
நனைத்து
காத்துவருகிறேன்
தெருமுனைவரை
திரும்பி திரும்பி
பார்த்து சென்றதும்
முனையில்நின்று
கையசைத்து
சென்றதும்
கண்ணைவிட்டு
அகலாமல்
காட்சியாக நிற்கிறது
'இன்று வருகிறேன்'
என்ற இனிப்பான
செய்தி கேளாமல்
கற்சிலையாய் நான்!

Comments : 

குறள் : 1196

இன்றைய 
நீதிதேவதையின்
தராசு அதிகமாக
வலப்பக்கம்
சாய்ந்ததால்
பணத்திற்காக
பதவிக்காக
சாய்க்கப்பட்டதால்
பாரதமாதா
களையிழந்து
வாடுகிறாள்
எந்தபக்கமும்
சாயாத 
நீதி தராசு
எல்லாரும்
விரும்புவதுபோல்
சமநிலை தவறாத
இருவரும்
நேசிக்கும்
காதலே
தலைசிறந்த
காதலாகும்
ஒருதலைக்காதல்
உவகை தராது!

குறள் : 1197

சூரியன் 
பூமியின்மீது
பாதி ஒளியை
வீசி பகலாக்கி
மீதி பூமியை
இரவாக்கி
இருளை
படரவைத்து
இன்னலில்
ஆழ்த்துகிறது.
அதுபோல
நிலாமகள்
மீதும் கதிரை 
வீசாமல்
அமாவாசை
ஆக்கி இருள்
படரவைத்து
இன்னலில்
ஆழ்த்துகிறது.
சூரியனும்
காமனும்
ஒன்றா?

பூமி
நிலா
பெண்
இருட்டால்
பசலையால்
வதைக்கப்படுன்றனர்!

சாரி

சாரி சொன்னேன் பதிலில்லை புரிந்துகொண்டேன் கோபம் என!