Monday, 16 May 2022

மறுப்பு



ஊரெல்லாம் உன் வம்பிருக்க
நீ வீடு வந்து சேரும்வரை
வாசலிலே நான் காத்திருக்க
காலையும் மாலையும்
கீச்சலில் கழிக்கிறாய்
மதியநேரத்தில்
நேர்காணல் தருகிறாய்
மிச்சநேரத்தில்
தொ(ல்)லைபேசி அழைப்பு 

காய்கறி வாங்கவும்
துணிமணி துவைக்கவும்
துளியும் உதவாமல்
கண்நோக்கி களியாமல்
காதல்மொழி பேசாமல்
இடைவளைத்து கொஞ்சாமல்
முகம் பிடித்து கெஞ்சாமல்
பிறந்தநாளும் மணந்தநாளும்
வருடந்தோறும் மறக்கிறாய்
கனவு கலைந்து விழித்தேன் 

உன் பின்னால் வந்து
ஒரு பயனும் இல்லை
எட்டியே நின்றுவிடு
மணவாளன் ஆசைவிடு
உன் மணவாட்டி ஆகி
மருகிநிற்க ஆசையில்லை
தள்ளிநில் என்னவனே
தவறியும் மணக்காதே
தொழிலையே தொழுதுசெல்
இருவருக்கும் நல்லது

Friday, 13 May 2022

வெட்கம்

வெட்கம்

கருஞ்சிவப்பு ஆப்பிள் 
கையில் எடுத்தேன்
உன் கன்னம் ஞாபகம்
வந்ததால்
நறுக்க மனமின்றி
கத்தி நழுவியது
ஆப்பிளுக்கு வயது
உன்னைவிட அதிகம்
வரிகளும் புள்ளிகளும்
அதிகமாய் இருந்தது
மாசற்ற உன் கன்னம்
ஆப்பிளை ஜெயித்தது

மஞ்சள் கண்டதும்
உன் கண்கள் ஞாபகம்
நிறத்தை தானமாக்கி 
மஞ்சள் ஆனது
கர்ணணுக்கு தம்பி
கண்ணாடி தள்ளும்
நடுவிரல் அழகு
மீசையின் மையம்
கீழ்உதடு மையம்
கட்டைவிரல் நகர்ந்து 
அடிக்கடி அழுத்தியது
பதட்டமா வெட்கமா

மேல்வரிசை பற்கள்
பாதி மட்டும் தெரிய
விரல்நகம் கடித்து
சிரிக்கின்ற அழகு
ஆணிண் வெட்கம்
அவ்வளவு அழகு
விசிறிக்கும் காற்றுக்கும்
பணியாத கேசம்
உன் விரலுக்கு பணியும்
மாயமென்ன சொல்






,

சாடல் மழை

பாடுபொருள் யாரென
பதரே உனை  கேட்பேனோ
தாமரை நேசனே
மல்லி வாசம் அறிவாயோ
சேற்றில் மலர்பவருக்கு
செருக்கு எதற்கு
அதைசெய் இதைசெய்
அதை தவிர் இதை தவிர்
திணிப்பவருக்கு தெரியுமோ
திண்பவனின் உணர்வு
நான் என்ன செய்யவேண்டும்
ஆணையிட நீ அண்ணணா
மூடனே மூளை வளர் 

சமூகநீதி கொண்டாடும்
சமகால திராவிடரே
சமநீதி அறிவாயோ
கருத்து மாற்றுக்கருத்து
எல்லோருக்கும் இடமுண்டு
என் தோட்ட மலர் மணம் பேச
உன் செவியில் புகை ஏன்
கண்ணியம் யாதென
கனிமொழியாரை கேள்
நா கட்டுப்பாடு யாதென
முதல்வரை கேள்
எதையும் தாங்கும் இதயம்
யாதென அறிய
அறிவாலய நூலகத்தில்
அப்பப்போ நுழைந்து பார்
திராவிட பாசறை
பயிலரங்கம் சென்று பார்
எதுவுமே படிக்காமல்
எப்படி நீ திராவிடன்?

Wednesday, 11 May 2022

காவலன்


செவ்வக கண்ணாடி
தள்ளிவிட்டு பேச
உள்ளம் நழுவி விழும் 
ஊடுறுவும் கண்கள்
ஊண் தாண்டி பாயும்
குழந்தையின் உடல்மொழி
குலுங்கும் குறும்பு சிரிப்பு
உண்மை அலசும் அறிவு
பேரழகன்டா நீ
பெண்மீது மரியாதை
ஆண்மீது அடாவடி 
மீசை முறுக்கி பேசும்போது
மனசு திருகி கிறங்கும் 
சினிமாக்காரன் தோற்பான்
கொள்ளையிடும் அழகில் 

சமையலறையில் புகுந்து
உப்பு காரம் புளிப்பு
விகிதம் மாற்றினாய்
முக்கிய வேலையை மறந்து
உன் துதி பாட வைத்தாய்
தொலைந்துதான் போயேன்டா
தொந்தரவு குறையட்டும்
காலம் களவாடினான் என
காவல் நிலையம் செல்லவா 

                             தெய்வானை
சாடல்மழை பொழிகிறாய்
சொல்குழலால் சுடுகிறாய்
காவல்பணி தள்ளினாலும்
கண்காணிப்பு தொடர்கிறது
அரசாங்க அறைகளில்
கதவா ஜன்னலா
எதுவாக நுழைகிறாய்
எல்லோரும் யோசனையில்
அச்சமில்லை அச்சமில்லை
கணப்பொழுதும் ஜெபிக்கிறாய்
            
                            - தெய்வானை



Saturday, 23 April 2022

கசிவு

நீ ஒன்றும் அப்படி
அழகு இல்லை
ஆனால் அதுஒன்றும்
குறையுமில்லை
பாட்டு ஞாபகம்
உனை பார்க்கும்போது
புவி ஈர்ப்பு விசை
கண் ஈர்ப்பு விசை
எது பலமானது
எனக்குள் பட்டிமன்றம்

நூறு மைல் வேகம்
நொடியில் இழுக்கிறாய்
முத்துப்பல் வரிசைக்கு
எத்தனைபரிசு கேட்பாய்
கருத்தில் நிறைந்து
கழுத்தை நெரிக்கிறாய்
கண்திறந்ததும்
காட்சிப்பிழையாய் நீ

Socha nahi achaa buraa
Fatum ingenium Est
Stand out of our light
Never let me go
In the mood for love
Giftsundoku
அறிமுக வரிசையில்
இன்னும் எத்தனை

ஒளியார் முன் ஒள்ளியர் 
பொருட்பெண்டிர்
பொய்ம்மை முயக்கம்
வள்ளுவரும் வந்து
திநகரில் நின்றார்
எண்ணம் எழுத்து
எதைக்கொண்டு ஈர்க்கிறாய்
உன் தமிழுக்கு
மதுவென்று பேர்
உன் தமிழே
போதும் என் பேறு
எட்டாக் கனியாய் 
இதயத்தை கொய்தாய்


சம நீதி


சென்ட் வாசனை
ரொம்ப பிடிக்கும்
அலமாரியில் இருந்தது 
தடவிக்கொண்டாள்
பயங்கரமாக திட்டு
இதை நீ போட்டுக்கொண்டால்
ஆண் அக்ரஸ்ஸிவ் ஆவான்
காரணம் சொன்னார்
நீங்கள் மட்டும் போடலாமா
பெண் அக்ரஸ்ஸிவ் 
ஆகமாட்டாளா கேட்டாள்
எனக்கு அதிகம் வேர்க்கிறது 
வாடை போக தேவை என்றார்
ஆண் வேர்வைக்காக போட்டால்
பெண் வாசத்திற்காக 
ஏன் போடக்கூடாது? 

மீறி ஒருநாள் போட்டதும்
நடத்தை சரியில்லைடி
கம்ப்ளெயின்ட்  தைத்தது! 

என்றேனும் ஒருநாள் 
அவரே வாங்கி வந்து 
உனக்கு பிடிக்குமே
போட்டுக்கோ சொல்வார்
எதிர்பார்ப்பில் பெண்! 

படிக்கிற பிள்ளைக்கு
மேக்கப் எதற்கு
அப்பா தடுத்தார்
பாடம் சொல்பவளுக்கு
சென்ட் எதற்கு
கணவன் கேட்டார்
இந்த வாசம் பிடிக்கலைமா
அருகில் படுத்த 
மகன் சொன்னான் 

எனக்கு பிடித்த வாசனை 
எப்போது தான் நுகர்வது? 

இன்னொரு பெரியார்
பிறக்கணுமோ? 

Tuesday, 19 April 2022

கனிமொழி


கனிந்த மொழி தமிழை 
உரசி பார்த்த காயை
ஆத்மநிர்பர் வரலை
தமிழிழே பேசவா என
கனிந்தமொழியால்
வடக்கன் வாயை 
மூடச்செய்த 
இனிய மொழியாள் 

தமிழ் வளர்த்த தந்தை
இனம் காக்கும் தனயன்
பெரியாரின் நீதி
வழிமொழிந்த பாடங்கள்
கசடற கற்று தேர்ந்து
சரியான நேரத்தில்
தெளிவான கணை தொடுத்து
பாராளுமன்றத்தில் 
போராடும் மொழியாள் 

வடக்குக்கு வாரிக்கொடுத்து
தெற்கிற்கு கிள்ளிக்கொடுத்து
வஞ்சம் செய்தல் சரியோ
மையத்தை சாடி
துவைத்து தொங்க விடும்
பொங்கும் மொழியாள் 

விளிம்புநிலை மனிதனே
எப்போதும் குற்றவாளி 
எண்ணுகிற மாயை
ஏன் என கேட்கும்
மூது மூளையுள்ள
கனன்ற மொழியாள் 

தோப்போடு இருந்தாலும்
தனித்துவமிக்க மரமாக
வாழவும் வளரவும்
தாகத்தோடு நீர் தேடும்
ஆணி வேர் தாவரம்!


அக்கா என அழைக்கவா
அம்மா என அழைக்கவா
மேதகு என அழைக்கவா
குழப்பத்தில் பின்தொடர்வோர் 

பெண்ணாய் வெல்க !
விண்ணை தொடுக! 

Monday, 18 April 2022

அழைப்பிதழ்

பால்ராஜ் மகன் கல்யாணம்
சோலங்கி மகள் கல்யாணம்
வெங்கடேஷ் வரவேற்பு
திருமுருகன் பிரிவு உபச்சாரம்
எத்தனையோ விருந்துகள்
அழைப்பிதழ் மேஜையில்
அனந்தா வித் பேமிலி
அழகாய் எழுதியிருக்கும் 

மகளின் கேள்வி
ரெட் சாஸ் பாஸ்தா
ஒய்ட் சாஸ் பாஸ்தா
எதும்மா வச்சிருப்பாங்க
மகனின் கேள்வி
சிக்கன் 65 இருக்குமோ
சாஹி பன்னீர் இருக்குமோ
தெரியலடா என்பேன்
எனக்குள்ளும் கேள்வி
எத்தனை வகை இருக்கும்
தட்டு நிறைய உணவு 

மாலையும் வந்தது
கதவை சாத்திக்கொள்
கல்யாணத்திற்கு போகிறேன்
செய்தி சொல்லி போவார் 

புலம்பெயர்ந்த மனைவியற்கு
உள்ளூர் விருந்தும் இல்லை
அயலூர் விருந்தும் இல்லை
தொண்டையை ஏதோ அடைத்தது

Sunday, 17 April 2022

E 2 பிரியாணி



E 2 பிரியாணி
Eat eat சொன்னது
பிரிஞ்சி இலையும்
பிரியாணிமசாலாவும்
பட்டிமன்றத்தில்
எதிரும் புதிருமாய்
சுவைக்கு காரணம் 
நானே சொல்ல
அங்க என்னடா சத்தம்
பாப்பையா சொன்னார்
சமைத்தவரே காரணம்
சத்தமாய் தீர்ப்பு தந்தார்
கைவழியே நுழைந்து
வயிறு மட்டுமா நிறைந்தது
உள்ளமும் அல்லவோ
அன்பிற்கு நன்றி
உறவுக்கும் நன்றி 

- தெய்வானை 

Sunday, 10 April 2022

திருமலை மாமா



வார இறுதியில் வந்துசெல்லும்
அக்கா மகளுக்கு
தலைக்கு தேங்காய் எண்ணையும்
துவைக்க நிர்மா சோப்பும்
குளிக்க லைபாய் சோப்பும்
கொரிக்க மிக்சரும் முறுக்கும்
வாங்கித்தந்து பஸ் ஏற்றிவிடுவார்
சம்பூர்ணா தியேட்டரில்
எங்கேயோ கேட்ட குரல்
லட்சுமி தியேட்டரில் 
எங்க ஊரு பாட்டுக்காரன்
இன்னும் பல
ராமராஜன் படங்கள்
சனிக்கிழமை ஸ்பின்னிங் மில் 
என்னையும் அழைத்துசெல்வார்
மதியம் பரோட்டா குருமா
இரவு தோசை வாங்கித்தருவார்
ஞாயிறு காலையில் சுடச்சுட
எலும்புக்குழம்பும் இட்லியும்
இரவு 9 மணிக்கு 
கண்ணம்மா அக்கா வீட்டிற்கு
போகிறேன் என்றால்
காலையில் போ என்ன அவசரம்
என்று சொல்லி அனுமதிக்கமாட்டார்
டாக்டரிடம் அழைத்து சென்று
ஒல்லியாகவே இருக்கிறாள்
உடம்பே தேறவில்லை
என்னன்னு பாருங்க என்பார்
பஸ் ஏற்றிவிட வந்தால்
பத்தடி தள்ளி நிட்பார்
ஏன் மாமா என காரணம் கேட்டால்
உன் கூட படிக்கும் பிள்ளைகள்
பார்த்தால் அசிங்கமாய் நினைப்பார்கள்
என்று சொல்லி தூரமாய் நிட்பார்
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்
தோற்றத்தால்  குறைந்தவர்
உள்ளத்தால் உயர்ந்தவர்
அன்பால் நிறைந்தவர்
நேர்மறை எண்ணங்களால்
நிரம்பி வழிந்தவர்
தவறு காணும்போது
வலிக்காமல் சொல்பவர்
இனிய நினைவுகள் 
சொத்தாக சேர்ப்பவர் 

நானும் ஒருநாள்
யாராலும் நினைவுகூரப்படுவேனா?
எத்தனை மனிதரில்
கரைந்திருப்பேன்?

அய்யய்யோ கடவுளே
அக்காவுக்கு தங்கைக்கு
அத்தைக்கு அம்மாவுக்கு
அண்ணிக்கு பெரியம்மாவுக்கு
தோழிக்கு ஆசிரியைக்கு
ஒன்றும் தீங்காய் பெரிதாய்
நடக்கக்கூடாது என 
ஆத்மார்த்தமாய் பிரார்த்திக்கும்
உதடுகளும் உள்ளங்களும்
சம்பாதிப்பேனோ இல்லையோ !

ஒரு ஜீவன் ஆமென்றாலும்
நான் வாழ்வை வென்றவளாவேன்!

10/04/2022/16:29 PM

முதிர்வு

பழக்கமானவை மறந்துபோகும் அதிகநேரம் அமர்ந்தால்  இடுப்பெலும்பு வலிக்கும் முடிஅடர்த்தி குறையும் நரைக்கும் தோல்கள் கடினமாகும் தூக்கம் குறையும் வய...